டெல்லி: டெல்லியில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை போக்குவரத்த மட்டுமல்லாமல் வானிலை மோசமடைந்ததால் 14 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
தென்கிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, ஷாதரா, மத்திய டெல்லி, வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி, தென்மேற்கு டெல்லி, மேற்கு டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 67 மி.மீ. அல்லது 6.7 சென்டிமீட்டர் மழை பெய்தது. ஜனக்புரியில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழையும் சத்தர்பூரில் 57 மி.மீ.மழையும், பிதம்புராவில் 35 மி.மீ. மழையும், சஃப்தர்ஜங்கில் 29 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மழைநீர் தேங்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் தொடர்பாக வாகன ஓட்டிகள் சமூகவலைதளங்களில் தகவல்களை பதிவிட்டனர். டெல்லியின் முக்கிய வானிலை நிலையமான சஃப்தர்ஜங்கில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பை விட 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் பல முக்கிய சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜக்கீரா சுரங்கப்பாதையில் பயணிகள் தண்ணீரில் நடந்து சென்றனர். சிவாஜி ஸ்டேடியம் அருகே மழைநீர் தேங்கிய காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலானது. டெல்லியில் பெய்த மழையால் வானிலை மோசம் மற்றும் பார்வைத் திறன் குறைவு உள்ளிட்டவைகளால் 14 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, சண்டீகர் உள்ளிட்டவைகளுக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.