சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டமும் கடகடவென நிரம்பி வருகிறது.
நேற்றும் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கும் கோவை, நெல்லை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில், தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, குமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதே போன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.