11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த பருவமழை.. தமிழகத்தில் மட்டும் 20% பற்றாக்குறை.. நிலைமை மோசம்

  • டெல்லி: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், நாடு முழுவதும் இயல்பை விட 13 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பருவமழை மோசமாக இருந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    குறிப்பாக தென்னிந்தியா, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பற்றாக்குறை அதிகமாக இருந்துள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகாவில் 30 சதவீதமும், கேரளாவில் 28 சதவீதமும், ஆந்திரப் பிரதேசத்தில் 25 சதவீதமும், தமிழகத்தில் 20 சதவீதமும், தெலங்கானாவில் 18 சதவீதமும் மழை குறைந்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும் 25 சதவீதத்துக்கும் அதிகமான பற்றாக்குறை பதிவாகியுள்ளது.

    Advertisement

    மழை பற்றாக்குறை

    இந்த ஆண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 759.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. 2001ம் ஆண்டுக்கு பிறகு மிக குறைவான அளவு மழை பதிவான நான்காவது ஆண்டு இதுவாகும். 1901ம் ஆண்டுக்கு பிறகு கணக்கிடும்போது, இது 13வது குறைந்த ஆண்டாகும். எல் நினோ தாக்கம் இந்த மழை பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2015ம் ஆண்டில்தான் பருவமழையில் இதே அளவுக்கு, கிட்டத்தட்ட 13 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மழை மிகவும் மோசமாக இருந்தது. இயல்பாக கிடைக்க வேண்டிய மழையில் வெறும் 65 சதவீதம் மட்டுமே அந்த மாதத்தில் பதிவானது. ஜூலையில் ஓரளவு மழை நிலை மேம்பட்டாலும், ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த மாதத்தில் இயல்பான மழையில் 84 சதவீதம் மட்டுமே கிடைத்தது. செப்டம்பரில் சிறிய அளவில் முன்னேற்றம் காணப்பட்டாலும், ஒட்டுமொத்த பற்றாக்குறையை அது ஈடுகட்ட முடியவில்லை.

    Advertisement

    மாநில வாரியாக

    மாநிலங்களை பொறுத்தவரை மணிப்பூரில் அதிகபட்சமாக 46 சதவீத மழைப்பற்றாக்குறை பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் 44 சதவீதமும், பஞ்சாபில் 41 சதவீதமும், பீகாரில் 32 சதவீதமும், அசாமில் 28 சதவீதமும், ஹரியானாவில் 23 சதவீதமும் மழை குறைந்துள்ளது.

    மழை பற்றாக்குறை காரணமாக செப்டம்பர் மாதம் வழக்கத்தைவிட அதிக வெப்பமாக இருந்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை, 1901ம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக வெப்பமான செப்டம்பர் மாதமாக இந்த ஆண்டு செப்டம்பர் அமைந்துள்ளது. நாடு முழுவதும் இதே காலகட்டத்தை கணக்கில் எடுத்தால், அதிக வெப்பம் பதிவான செப்டம்பர் மாதங்களில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் அதிக வெப்பம் பதிவான ஐந்து செப்டம்பர் மாதங்களில் நான்கு, கடந்த ஆறு ஆண்டுகளிலேயே ஏற்பட்டிருக்கிறது. இது புவிவெப்ப மயமாதலின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தென்மேற்கு பருவமழை

    தென்மேற்கு பருவமழை இப்போது முடிந்து வருகிறது. அடுத்த 2 முதல் 3 நாட்களில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவமழை முழுமையாக விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியளவில் நிறைவடையலாம். அதன் பிறகு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் 177 வட்டாரங்களும், மகாராஷ்டிராவில் 265 வட்டாரங்களும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    மழை பற்றாக்குறையின் தாக்கம் விவசாயத்திலும் எதிரொலிக்க உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு காரீப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட மொத்த பரப்பளவு சுமார் 1.3 சதவீதம் குறைந்துள்ளது. காரீப் பருவத்தின் முக்கிய பயிரான நெல் சாகுபடி பரப்பளவு மட்டும் 3.7 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்கனவே சாகுபடி பரப்பளவு குறைந்துள்ள நிலையில், மழை பற்றாக்குறை விளைச்சலை மேலும் பாதிக்கக்கூடும்.

    Advertisement

    பருவமழை தாக்கம்

    அதேநேரம் பருவமழை பற்றாக்குறையின் நீண்டகால தாக்கம் விவசாயத்துடன் முடிவடையாது. பிஸ்னஸ், சர்வீஸ், ஹெல்த் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளிலும் இதன் தாக்கம் வெவ்வேறு அளவில் இருக்கலாம். மேலும், அடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவில் வெப்பம் தொடர்பான காரணங்களால் கூடுதலாக சுமார் 16,000 உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    English Summary

    India southwest monsoon season has ended with rainfall 13% below normal(இந்தியாவில் தொடர்ந்து சரியும் பருவமழை): India Monsoon latest news in tamil.