கொதித்து எழும்பிய அலை.. கள்ளக்கடல் சீற்ற வார்னிங்! முடங்கிய தூத்துக்குடி - கன்னியாகுமரி! என்னாச்சு?

  • சென்னை: தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 240க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதேபோல், கன்னியாகுமரியிலும், இரண்டாவது நாளாக தொடரும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரக்கணக்கான படகுகள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் இன்று அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலில் குளிக்கவும் கடற்கரை அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்திய பெருங்கடலில் கேரளா, தெற்கு தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் அதிக உயரம் கொண்ட அலைகள் மற்றும் கடல் சீற்றம் (கள்ளக்கடல் - Swell Surge) ஏற்படக்கூடும் என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால், கடற்கரை மற்றும் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் திடீரென அலை அலையாக சீறிப் பாய வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. மேலும், நாட்டுப்படகுகள் கரையோரம் மற்றும் குறைந்த ஆழமுள்ள பகுதிக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், கரையில் அல்லது கடலில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைவதைத் தவிர்க்க, படகுகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    Advertisement

    மேலும், கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதையோ, நீந்துவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகங்களில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல், கன்னியாகுமரி மாவட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது ஏற்கனவே கள்ளக்கடல் நிகழ்வால் காற்றின் வேகம் அதிகரித்து சுமார் 1.9.முதல் 2.1 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும் என்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கடல் சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    Advertisement

    இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது இதனையடுத்து நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், இன்றும் அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துதுடனே காணப்படுவதால் இரண்டாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Swell surge triggers rough seas in Kanyakumari and Thoothukudi, forcing fishermen to stay ashore as authorities issue safety warnings.