விட்டாச்சு லீவு! நீலகிரி மாவட்டத்தில் வெளுக்கும் மழை! கூடலூர், பந்தலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

  • ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து கொண்டு வருகிறது. கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளது.

    Advertisement

    நேற்று முன் தினம் காலை காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி படகு இல்லத்தில் பெடல், துடுப்பு படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அது போல் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட வட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளம் வரை காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.

    இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 வரை, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    11 இடங்களில் வெயில் சதம்:

    திங்கள்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்சமாக 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

    நாகை - 104, கடலூா் - 102.94, மதுரை விமான நிலையம், புதுச்சேரி தலா - 102.02, பரங்கிப்பேட்டை - 101.84, சென்னை விமான நிலையம் - 101.66, சென்னை நுங்கம்பாக்கம் - 101.48, மதுரை நகரம் - 100.76, திருச்சி, திருத்தணி தலா - 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

    Advertisement

    மழை அளவு: திங்கள்கிழமை நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழை பதிவானது.

    இன்று (07-07-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English Summary

    Nilgiri District Collector declared a holiday for schools in Gudalur and Pandalur taluks today as heavy rain poured in Western Ghats.