சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் அர்னாப் புயல், அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் புயல் சின்னத்தை தன்னுள்ளே இழுக்க தொடங்கியிருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்கப்போகிறது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது "வங்கக்கடலில் உருவாகி வரும் அர்னாப் புயல் மற்றும் அரபிக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகிய இரு வானிலை அமைப்புகளுக்கு இடையே நடக்கும் விசித்திரமான அறிவியல் தொடர்பு, பாக்ஸிங் சண்டை போல இருக்கிறது.
வங்ககடலில் இருந்து வலுவான அர்னாப் புயல் உள்ளே நுழைகிறது. இது அரபிக்கடலில் இருக்கும் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் மோதுகிறது. இந்த சண்டையின் முடிவில் அர்னாப் புயல் வெற்றி பெறும். இது அரபிக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை தன் பக்கமாக இழுத்து முழுமையாக விழுங்கிவிடுகிறது. அறிவியல் ரீதியாக இதை புஜிவாரா விளைவு என்று கூறுவார்கள். அதாவது இரண்டு பயல் அல்லது காற்றழுத்த அமைப்புகள் அருகருகே வரும்போது பெரிய அமைப்பு, சிறிய அமைப்பை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும். இந்த இரு அமைப்புகளின் இணைப்பால்.. வளிமண்டல சுழற்சி மற்றும் மேகக்கூட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் விவைாக அடுத்த 2-3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பலத்த மழை மற்றும் அதிரடியான வானிலை மாற்றங்கள் இருக்கப்போகிறது. இது பொதுமக்களுக்கு இயற்கையின் வானிலை மாற்றங்களை எளிய முறையில் புரிய வைப்பதற்காக எழுதப்பட்ட பதிவே தவிர, மக்களை அச்சுறுத்ததுவற்காக அல்ல" என குறிப்பிட்டிருக்கிறார். வழக்கமாக எல்-நினோ ஆண்டுகளில் வட தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இது சூப்பர் எல்-நினோ ஆண்டாகும். எனவே மழையின் தாக்கம் கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உள் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியிருக்கிறது. நேற்று கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல.. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிக மழை பதிவாகியிருக்கிறது. டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களாக நல்ல மழை பதிவாகியிருக்கிறது. நீர் நிலைகள் முழுமையாக நிரம்பியிருக்கின்றன. இது சம்பா-தாளடி சாகுபடிக்கு ஏற்ற சூழலாகும். அர்னாப் புயல் தமிழ்நாட்டிற்கு வராது என்பதால் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், இந்த புயல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.