சென்னை: சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்பட 27 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்மையில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்தது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், அதையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், கடலோர, டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 21) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 27 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, காரைக்கால், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகின்ற அக்டோபர் 23 ஆம் தேதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.