சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் முழுக்க மழை விட்டு விளாசியது. மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. ஆனால் இந்த வாரத்தில் மழை பெரிதாக பெய்யவில்லை. மாறாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பகல் நேரங்களில் வெளியில் சென்றாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் இன்று மாலையில் அப்படியே கிளைமேட் மாறியது. கருமேகங்கள் திரண்டு சென்னையில் ஒரு சில இடங்களில் மாலையில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுக்க 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் இன்று கடுமையாக வெயில் சுட்டெரித்தது.