சென்னை: அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சூப்பரான சூட்டுக்கு பிறகு, அதாவது வெயிலுக்கு பிறகு மதியத்திற்கு மேல் கடலில் இருந்து வீசும் குளிர்ந்த 'கடல் காற்று' (Sea Breeze) நிலப்பரப்பிற்குள் நுழையும் போது, அங்கு ஏற்கனவே இருக்கும் வெப்பமான காற்றுடன் மோதி, செங்குத்தாக மேல்நோக்கி எழும்புகிறது.
இதன் காரணமாக, சென்னைக்கு மேலே திடீரென ஒற்றை மேகக்கூட்டங்கள் (Single Cell Clouds) உருவாகத் தொடங்கியுள்ளன. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மழையை தரும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார். பொதுவாக, வளிமண்டலத்தில் காற்றின் திசையும் வேகமும் (Wind Shear) சாதகமாக இருந்தால் மட்டுமே, இந்த மேகங்கள் மேலும் பெரிதாக வளர்ந்து பலத்த மழையைத் தரும். தற்போதைய நிலை: தற்சமயம் காற்றின் போக்கு இன்னும் முழுமையாகச் சாதகமாக மாறவில்லை. மழைக்கான வாய்ப்பு: காற்று சாதகமாக இல்லாவிட்டாலும் கூட, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு மேலே உருவாகும் இந்தத் திடீர் மேகங்கள், பெருமழை தராவிட்டாலும் குறுகிய நேரத்திற்குச் சட்டென்று ஒரு சில இடங்களில் மழையைக் (Short Spell of Rains) கொடுக்கும். இத்தகைய உள்ளூர் வெப்பச்சலன மேக வெடிப்புகள் (Overhead Developments), கோடைகாலத்தில் வறண்ட வானிலைக்கு இடையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குளிர்ச்சியான மழையைத் தரும் ஒரு முக்கிய வழியாகப் பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் மேகக்கூட்டங்கள் திரண்டு வராவிட்டாலும், சென்னைக்கு மேலே திடீரெனத் தோன்றும் ஒற்றை மேகங்கள், கடல் காற்றின் உந்துதலால் KTCC- காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் சடாரென மழையைக் கொட்டிவிட்டுச் செல்ல வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், இது வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் அளிப்பதாக அமையும். கடந்த சில மாதங்களாக கோடை வெப்பம் வாட்டி வதைத்தது. கடந்த மே 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலின் தாக்கம் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பத்தை கக்கியது. கடந்த 28ஆம் தேதியுடன் கத்தரி வெயில் முடிவடைந்தாலும் வெப்பம் என்பது தணிவதாக இல்லை. தகித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில், உள் மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்கிறது, இந்த சென்னை மட்டும் என்ன பாவம் செய்தது வருண பகவானே என நினைத்த போது வெதர்மேனிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. கொட்டோ கொட்டென மழை கொட்டாவிட்டாலும் சூட்டை கிளப்பாமல் தணிக்கும் வகையில் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.