நெல்லை: செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்ட போதிலும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு குறையாமல் கோடை வெப்பம் போல உக்கிரம் காட்டி வருகிறது. குறிப்பாக நெல்லை , தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தீ போல வெயில் விழுவதால், வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 40 டிகிரி வெப்பம் நேற்று பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கினாலும் ஏப்ரல் - மே மாத கோடை வெயில் போல வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தென் மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். நெல்லை, தூத்துக்குடியில் அவ்வப்போது சாரல் மழை அடித்துவிட்டு செல்லும். இதனால், வெப்பம் தணிந்து ஓரளவு இதமான சூழல் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தாலும் வெயிலின் தாக்கம் எந்த வகையிலும் குறையவில்லை. நேற்று முன் தினம் நெல்லையில் 105 டிகிரி வெப்பம் பதிவானது. செப்டம்பர் மாதத்தில் 105 டிகிரி வெப்பம் பதிவானது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். பகல் நேரங்களில் கடுமையான வெப்பத்துடன் அனல் காற்றும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பேனை போட்டால் கூட காற்று வரவில்லை தீ தான் வருது என மக்கள் கூறி வருகிறார்கள். எல் நினோ தாக்கம் காரணமாக இந்த ஆண்டு போதிய அளவு மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணியை தாண்டிய போதும் கூட 34 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்ட மக்கள் பெரும்பாலும் விவசாய தொழில்களையே சார்ந்து இருப்பதால், தீ போல வெப்பம் உக்கிரம் காட்டுவதால் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படும் நிலையே உள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, நேற்று தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பம் பாளையங்கோட்டையில்தான் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் 40.4º செல்சியஸ் பதிவாகியிருந்தது. இந்த மாதம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்று வானிலை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மழைப்பொழிவும் குறைவாக இருக்கும் என்பதால் வெயிலின் உஷ்ணம் இந்த மாதம் முழுக்க கடுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 21 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பே மக்கள் மத்தியில் தற்போது நிலவி வருகிறது. அதே நேரம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது மிதமான மழை பெய்தது.தீ தான் வருது
21 சதவீதம் மழை பற்றாக்குறை