தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்!

  • டெல்லி: இந்தியாவின் விவசாயத்திற்கும் முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்கு பருவமழை மே 26ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 2 முதல் 4ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. போதிய அளவு மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் மேகமூட்டம் போன்ற காரணங்கள் பூர்த்தியாகாததால், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான தேதியை வானிலை மையம் மாற்றியமைத்துள்ளது.

    Advertisement

    வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பருவமழை, இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலைகளுக்கு மத்தியில், பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கேரளாவின் சில பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வந்த போதிலும், பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அறிவிக்கவில்லை. பருவமழை தொடங்கிவிட்டது என்பதை அறிவிக்க சில அடிப்படை விஷயங்கள் நடக்க வேண்டும். கேரளாவில் உள்ள 14 வானிலை ஆய்வு மையங்களில் குறைந்தபட்சம் 60% மையங்கள், தொடர்ந்து 2 நாட்களுக்கு 2.5 மி.மீ அல்லது அதற்கு மேல் மழையைப் பதிவு செய்ய வேண்டும்.

    மேற்கு திசைக் காற்றானது குறிப்பிட்ட உயரத்தில் சுமார் 27 முதல் 37 கி.மீ வேகத்தில் வீச வேண்டும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடர்ந்த மேகமூட்டம் இருப்பதை செயற்கைக்கோள் தரவுகள் உறுதிப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது மட்டுமே 'பருவமழை தொடங்கிவிட்டது' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    Advertisement

    பருவமழை தாமதமாகியுள்ள இதே வேளையில் வட, மத்திய மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் கோடை வெயில் மிகத் தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் பல நாட்களாக வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. மேலும், டெல்லி தனது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிக வெப்பமான மே மாத இரவைச் சந்தித்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழைப்பொழிவில் 70% இந்தத் தென்மேற்கு பருவமழைதான் வழங்குகிறது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இந்த மழையை நம்பியே உள்ளன. பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு சராசரியான மழைப்பொழிவில் 92 சதவீதம் மட்டுமே பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

    Advertisement

    இதனால் பல்வேறு சிக்கல் உருவாகும் என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். பருவமழை குறைவாக பெய்தால், பயிர் விதைப்பு காலதாமதமாகும். அதேபோல் விளைச்சல் குறைவு ஏற்படுவதோடு, கிராமப்புற வருவாய் பாதிப்பை சந்திக்கும். இன்னொரு பக்கம் போதிய மழை பெய்யவில்லை என்றால், உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது.

    பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை என்றால், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8% - 6.9% என்ற அளவில் இருந்து 6.5% ஆகக் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது ஜூன் முதல் வாரத்தை நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

    English Summary

    South West Monsoon Misses May 26 Target; Delayed Onset and El Niño Threat Spark GDP Growth and Inflation Concerns