சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல.. தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
நேற்று முன்தினம் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (04-07-2026) காலை 05.30 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 3 நாள்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடையக்கூடும்.
இதன் காரணமாக இன்று.. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06-07-2026 முதல் 10-07-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (05-07-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.சென்னை வானிலை