சென்னை: தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கோவை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் முதல் மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை வடதமிழகம் மற்றும் வடகேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்டோபர் 6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.