விடாமல் வெளுக்கப் போகுது மழை.. 5 மாவட்டங்களை மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! எங்கெங்கே?

  • சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் பருவமழை தாமதமானதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாயினர். மேலும் அணைகளின் நீர்மட்டமும் குறைந்ததால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    Advertisement

    பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 1730 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது.

    Advertisement

    இது அடுத்த இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர- தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையில் கரையை கடக்கக்கூடும்.

    சுமார் 3.1 முதல் 7.6 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை, கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

    Advertisement

    இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai, Kanchipuram, Chengalpattu, Tiruvallur and Ranipet may receive thunderstorms, strong winds and light to moderate rain today.