சென்னை: வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பாதையானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கை கொடுக்காத நிலையில், தென்மேற்கு பருவமழை கை கொடுக்கும் என எதிர்பார்த்தனர் விவசாயிகள்.
ஆனால் கடந்த வாரம் வரை எதிர் பார்த்த மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், செப்டம்பர் 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என கூறப்படும்.