சென்னை: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்றும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாகவே வெயில் மீண்டும் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. நெல்லை, தென்காசி, மதுரை என தமிழகம் முழுக்க வெயில் வாட்டி வதைக்கிறது. தென் மேற்கு பருவமழை விடைபெற்ற நிலையில், வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
எல் நினோ பாதிப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் பருவமழையும் இன்னும் தொடங்காமல் இருந்து வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை திங்கட்கிழமை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.