Rain Alert: தமிழகத்தில் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!

  • சென்னை: வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வு காரணமாக இரண்டு நாள்களுக்கு (ஜூன் 30, ஜூலை 1) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    செவ்வாய்க்கிழமை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல, புதன்கிழமை (ஜூலை 1) கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

    Advertisement

    திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை கடலூரில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. வேலூர் - 102.02, புதுச்சேரியில் 100.76, திருத்தணி (திருவள்ளூர்)-100.58, சென்னை மீனம்பாக்கம், நாகை தலா 100.4, சென்னை நுங்கம்பாக்கம் 100.22, பரங்கிப்பேட்டை - 100.04 டிகிரி ஃபரான்ஹீட் பதிவானது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Heavy rain is likely in parts of Tamil Nadu for the next two days, while fishermen have been advised not to venture into the sea due to strong winds.