சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 12) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம் மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக்.12) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.12), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 50 மி.மீ. மழை பதிவானது.11 மாவட்டங்களில் மழை
அதிகரிக்கும் வெப்பநிலை