வங்கக்கடலில் மேஜிக்.. சென்னையில் நடக்கும் மாற்றம்! வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்

  • சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இருப்பினும் அடுத்த ஓரிரு நாட்களுக்கு சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மேற்கு வங்கம்-ஒடிசா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதற்கும் தமிழகத்தில் பெய்யும் மழைக்கும் நேரடியாக பெரிய தொடர்பு கிடையாது.

    Advertisement

    ஆனால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முந்தைய காலம்.. தமிழகத்தில் வெப்பச்சலன இடியுடன் கூடிய மழை உருவாவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும். கடும் வெப்பம்+ஈரப்பதம்+காற்றின் சங்கமம் இதெல்லாம் சேர்ந்து இடியுடன் கூடிய மேகங்களை உருவாக்கும். வலுவான மேற்கு திசை காற்றின் காரணமாக உள்நாட்டில் உருவாகும் இந்த மேகங்கள் இரவு நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

    எனவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள்.. அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், அத்துடன் சென்னையை சுற்றியுள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சேலம், நாமக்கல், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

    Advertisement

    மழைப்பொழிவு இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் 30-50 மி.மீ மழை பெய்கிறது எனில். அதற்கு பக்கத்தில் உள்ள இடத்தில் 5-10 மி.மீ மழைதான் பதிவாகும். சென்னையின் சில பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைவான மழையும் பெய்யும்" என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருக்கிறார்.

    தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகி வருகிறது என்று ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இப்படி இருக்கையில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வெதர்மேன் தெரிவித்திருப்பது வட தமிழக மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    தென்மேற்கு பருவமழை பலவீனமாக இருப்பதால், கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாக இருக்கிறது. இதனால் காவிரி நீரை கர்நாடக அரசு போதுமான அளவுக்கு திறக்கவில்லை. எனவே மேட்டூரில் நீர் திறக்கப்படவில்லை. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 85 அடியாக இருக்கிறது. 90 அடியை நீர் எட்டும்போதுதான் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படும்.

    இன்று வரை நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்கள் முழுமையாக வறட்சியடைந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் மழையாவது ஒரளவுக்கு கை கொடுக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

    English Summary

    Tamil Nadu Weatherman: The Southwest monsoon in Tamil Nadu has not delivered as much rainfall as expected this year. However, 'Tamil Nadu Weatherman' Pradeep John has stated that there is a chance of good rainfall in Chennai over the next couple of days.