சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தற்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கக் கடலில் முரசு புயல் உருவாகியுள்ள நிலையில் திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புயல் பாதை மாறினால் சென்னையில் மிக கனமழை பெய்யும் என வெதர்மேன் கூறியிருந்தார். தற்போது அந்த புயல் எங்கே இருக்கிறது என அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதை காணலாம். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: முரசு புயல் அதிவேகமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நெல்லூர் - காவாலி/ஓங்கோல் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சென்னையின் அட்சரேகையை கடந்து வடக்கே நகர்ந்துவிட்டது. நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 290 கி.மீ தொலைவிலும் ஓங்கோலுக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் முரசு நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் தெற்கு ஆந்திர கடலோர பகுதியான நெல்லூர்- நெல்லூர்/ காவாலி/ நாசாபூர் (ஓங்கோல் அருகே்) இடையே தீவிர புயலாகவே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மையம் கொண்டுள்ள திசை வடக்கு என்றாலும் அதன் சுழலும் மேகக் கூட்டங்கள், நிலப்பரப்பை நோக்கி நகரும் மேற்கு பகுதி மேகங்கள், எதிர்பார்த்ததை விட சென்னைக்கு நல்ல மழையை தரக் கூடும். புயல் வடமேற்கு நோக்கி நகரும் போது அதன் சுழலும் வெளிப்பகுதி மேகங்கள் கடலில் இருந்து சுழன்று கொண்டு நிலப்பகுதிக்குள் நுழையும். இந்த நகர்வில் அந்த அடர்ந்த மேகக் கூட்டங்கள் சென்னை கடற்கரையை நோக்கி வந்தால் சென்னைக்கு மிகச் சிறந்த கனமழை பெய்யக் கூடும். புயல் சென்னையின் அட்சரேகைக்கு மேலே இருப்பதால் அதன் தென் மேற்கு சுழற்சி மேகங்கள் வட சென்னை, மத்திய சென்னை மற்றும் திருவள்ளூர் (பொன்னேரி/ கும்மிடிப்பூண்டி) பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. புயல் கரையை நெருங்கி வரும் போது காற்றின் வேகத்தால் மேகங்கள் சென்னை நோக்கி தள்ளப்படும். அப்போது பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார். முரசு புயல் குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவானது முரசு புயல். இது தீவிர புயலாக மாறக் கூடும். நவம்பர் 3ஆம் தேதி காலை நெல்லூர் மற்றும் நரசபூருக்கு இடையே கடற்கரையை வந்தடையும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முரசு புயல் தெற்கு ஒடிஸாவை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது. முரசு புயல் எதிரொலியால் நவம்பர் 4ஆம் தேதி காலை வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். தற்போது ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையம் மழைக்கான எச்சரிக்கையை அறிவித்துள்ளது. 02.11.2026 (நாளை): சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். 03.11.2026: நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இவ்வாறு தெரிவித்துள்ளது.முரசு புயல்
நெல்லூருக்கு கிழக்கு
சுழலும் மேகக் கூட்டங்கள்
அடர்ந்த மேகக் கூட்டங்கள்
முரசு புயல் எங்கே?
காற்றின் வேகம்
கடலுக்கு செல்ல வேண்டாம்
ஆரஞ்ச் அலர்ட்
நீலகிரி மாவட்டத்தில் மழை