சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழை நாளை அதிகாலை வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று இரவு முதல் நாளை காலை வரை கடலோர மாவட்டங்களுக்கு மிகச் சிறப்பான நாளாகும். சென்னையும் இந்த மழைக்கான ஹாட்ஸ்பாட் பகுதியில் வருகிறது.
இலங்கை அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் காற்று குவிதல் நிகழும். இது உள்மாவட்டங்களை கடந்து கேரளா வழியாக அரபிக் கடலை சென்றடையும். இதையடுத்த தென் தமிழகத்தில் மழை பெய்யும். இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை வேளையில் திடீர் மழை குறைந்த நேரத்தில் பெய்யும். ஆனால் அந்த மழை வீரியமிக்கதாக இருக்கும். இடையில் வெயிலும் இருக்கும். இன்று மாலை முதல் இரவு வரை மழையின் தீவிரம் அதிகரிக்கும். இது அப்படியே அதிகாலை வரை தொடரும். டெல்டா, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய கடலோர பகுதிகளும் மழையின் ஹாட் ஸ்பாட்டில் இருக்கிறது. இங்கும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை இருக்கும். தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அது போல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதே பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது. 3.1 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரா பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இவ்வாறு அறிவிப்பில் கூறியிருக்கிறது.கொஞ்ச நேரத்தில் பிச்சு உதறப் போது மழை! சென்னை தான் ஹாட்ஸ்பாட்டே! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்