சென்னை: வங்கக் கடலில் அர்னாப் எனும் தீவிர புயல் நாளை உருவாகும் நிலையில் இது ஆந்திராவின் பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த இடத்தில் இதுவரை கடந்த புயல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
இதையடுத்து தற்போது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். நாளை புயலாக வலுப்பெறும். 27 ஆம் தேதி தீவிர புயலாக மாறும். இது 28ஆம் தேதி ஆந்திராவின் பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த அர்னாப் புயல் கரையை கடக்கும் பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே இதுவரை எந்தெந்த புயல்கள் கரையை கடந்தன என்பதை தெரிந்து கொள்ளலாம். 1977ஆம் ஆண்டு திவிசீமா எனும் சூறாவளி புயல் கரையை கடந்தது. மிக மோசமான புயலான இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1979 ஆம் ஆண்டு மே புயல் ஓங்கோல்- பாபட்லா இடையே கரையை கடந்தது. இதனால் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் பாபட்லா, குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1990 ஆம் ஆண்டு ஆந்திராவின் அதி தீவிர புயல் இதே இடத்தில் கரையை கடந்து கடலோர மாவட்டங்களை சூறையாடியது. 1996ஆம் ஆண்டு காக்கிநாடா புயல் இந்த பகுதிக்கு இடையே காக்கிநாடா அருகே கரையை கடந்தது. இது மிக மோசமான புயலாக அறியப்படுகிறது. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கடும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2010ஆம் ஆண்டு லைலா என்ற பெயர் பாபட்லா டூ பிரகாசம் இடையே கரையை கடந்து குண்டூர் மாவட்டங்களில் கடும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. 2014 ஆம் ஆண்டு ஹூத்ஹூத் புயல், தீவிர புயலாக 185 கி.மீ வேகத்தில் விசாகப்பட்டினத்தை தாக்கியது. 2021 ஆம் ஆண்டு குலாப் புயலும் இடே இடத்தில் கரையை கடந்து பலத்த காற்றுடன் கனமழையை கொடுத்தது. 2023 ஆம் ஆண்டு மிக்சாங் புயல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பாபட்லாவுக்கு தெற்கே கரையை கடந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், தெற்கு ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பெய்தது. ஆந்திராவின் பாபட்லா முதல் விசாகப்பட்டினம் வரை வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் அடிக்கடி கரையை கடக்கும். அது போல் பாபட்லா, நிஜாம்பட்டினம், மசூலிப்பட்டினம், காக்கிநாடா, விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் புயல் பாதைகளில் இடம் பெறுவது வாடிக்கை! அந்த வகையில் தற்போது 2026 ஆம் ஆண்டு அர்னாப் புயலும் தீவிரப் புயலாக மாறி கரையை கடக்கும் என்பதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது எந்த மாதிரியான பாதிப்புகளை தரும் என்ற அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.கொடைக்கானலில் கொட்டும் மழை! சப்தமுடன் ஆர்ப்பரிக்கும் அருவி! சாலைகளில் வெள்ளநீரால் மக்கள் அவதி
அடித்து வெளுக்கும் மழை.. கோவை கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்