சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இப்படி இருக்கையில், அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் அறிக்கையில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக நேற்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "20-09-2026 மற்றும் 21-09-2026: நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-09-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23-09-2026 மற்றும் 24-09-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.