For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூதஞு" ச்டூடிஞ்ண="ணூடிஞ்டணா">- கி.ராஜநாராயணன்

கி. ராஜநாராயணன். இவர் ஒரு எழுத்துலக பாரதிராஜா. கிராமங்களை தன் எழுத்தின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுபவர். கிராமத்துக் கதைகளை கிராமத்துத் தமிழிலேயே வழங்குவதில் இவருக்கு நிகர் இவர் யாருமில்லை.

இவர் நமக்கு வாரம் ஒரு "கத சொல்வாரு"....

இந்த வாரம்...

ஒரு ஊர்ல, ஒரு புருசன் பெண்டாட்டி இருந்தாக. புருசங்காரன் ரொம்ப அப்புராணி. எதுக்கெடுத்தாலும் பயந்து சாவான். குஞ்சு பொறிச்ச கோழிக்குப் பக்கத்துலபோக பயப்படுவாம். கொத்திரும் ன்னுட்டு. அலுங்கப் பேச மாட்டாம். ஊத்தி வச்ச கஞ்சிய குடிச்சிட்டு எந் நேரமும் காட்டுல மாங்கு மாங்குன்னு வேலசெய்வாம்.

ஒரு நா வரப்பு வழியெ நடந்து வாரயில ஒரு பொடீக் கல்லு தடுக்கி கீழே விழுந்துட்டாம். லேசா ரத்தம் வந்துருச்சி. பதறிப் போனாம், தட்டுத் தடுமாறிஎந்திருச்சி வீட்டுக்கு வந்து பொண்டாட்டிகிட்ட ஆத்தா, நா பொழைக்க மாட்டேம் போலுக்கே. ஊரு நாட்டாம யவும் நாலு பெரியவுகளையும் கூப்புடு.எம் மொதுலு எல்லாத்தையும் உம் பேருக்கு எழுதி வச்சிருதேம் ன்னாம்.

பொண்டாட்டி போயி எல்லாரையும் கூட்டீட்டு வந்தா. அவுகளும் வந்து பாத்துட்டு, எம்புட்டோ சொல்லிப் பாத்தாக: இது ஒன்னும இல்லப்பா ன்னுட்டு.கேக்க மாட்டானுட்டாம். பிடிசாதகமா முதல் பூராத்தயும் பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சிட்டாம். அந்த பொண்டாட்டி பேர்ல அவனுக்கு அம்புட்டுஉசுரு.

நாலு நா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாம். சீராப் போயிட்டது. பழைய படிக்கு எந்திருச்சி வேலைக்குப் பொயிக்கிட்டுருந்தாம்.

ஊர்க்காரங்க எல்லாம் அவங்கிட்ட, என்னப்பா முதலு பூராத்தையும் ஒம் பொண்டாட்டி பேருக்கு எழுதி வச்சிடயே, அவ அத வித்து சிறுவாடு ஆக்கிவச்சிக்கிட்டா என்ன செய்வே. பேசாம ஒம் பேருக்கே மாத்தி எழுதிக்கொ ன்னாக.

அதெல்லாம் வேண்டாம். நா ராவும் பகலும் காட்டுல அலையுதேம். பாம்பு பல்லி கடிச்சி செத்துப் போனா என்ன செய்ய. சொத்து அவ பேர்லஇருக்கதுதாம் சரி ன்னுட்டாம்.

ஒரு நா,

காட்டுலயிருந்து வீட்டுக்கு வாராம். பொழுது நல்லா கரு கரு ன்னு மசங்கிருச்சி. வேகமா இருட்டிக்கிட்டு வருது. பொசு பொசுன்னு தூத்தல் வேற விழுது.வார வழியில ஒரு காட்டுக் கோயிலு. அங்ஙன வரவும் ஒரு முனகச் சத்தம் கேக்கு. யாரோ மழைத் தூரல்ல நனைஞ்சி கொடு கொடுன்னு நடுங்கிட்டுகிடக்கது தெரியிது.

அடடா, இதப்பாக்காதது போலப் போறது பாவம்லா ன்னுட்டு கிட்டெ போயிப் பாத்தா ஒரு சாமியார், அந்த சார மழையில நனைஞ்சிக்கிட்டு பசியோடகுளிர்ல ஆடிக்கிட்டு கிடக்காரு. அவர எழுப்பி உக்கார வச்சி, யாரு என்ன விபரம் ன்னு கேக்க,

அய்யா நா ஒரு அனாத. அப்பனுமில்ல, ஆத்தாளுமில்ல. உடம்பிறப்பு யாருமில்ல. வாட வழியா அலைஞ்சி அம்புட்டு முதல்லையும் தொலைச்சிட்டு ஒரு வா கஞ்சிக்குவழியில்லாம ஊருரா அலையிதேம் ன்னாரு அந்த சாமியார்.

சரி, எந்திரியும். பகல் பட்டினி கிடந்தாலும் ராப் பட்டினி இருக்கக் கூடாதுன்னு சொல்லி, அந்த சாமியார தூக்கிச் சுமக்காத குறையா வீட்டுக்குஅழைச்சிகிட்டு வாராம். திண்ணையில சாமியார உக்கார வச்சிட்டு வீட்டுக்குள்ள போயி பொண்டாட்டிகிட்ட, இன்ன மாதிரி சங்கதி, சாமியாருக்கு சோறுபோடு ன்னு சொன்னாம்.

அவ்வவுதாம்; பிடிச்சா வசவு; உரிச்சிட்டா இவன. இதென்ன சத்திரமின்னு நினச்சியா. கண்ட பயலுவ களுக்கெல்லாம் வடிச்சிக் கொட்ட. ஒன்னப்போலவும் ஒரு பேவுண்ட மனுசம் இருப்பானா உலகத்துல. இந்த மழ தண்ணி நாளையில ஈர விறகோட நானு லோலுப்பட்டுகிட்டு இருக்கேம். தருமம் பண்ணவந்துட்டாரு. இவரு. நீ என்ன பெரிய தருமரா. என்னதாம் ஒம் மனசுக்குள்ள நெனப்பு வச்சிட்டிருக்கெ... அதா இதான்னு அவன தொலிச்சிட்டா.

இந்தா, சட்டியில ஒனக்கு மத்தியானம் காச்சுன கஞ்சி இருக்கு. குடிச்சிட்டு மூச்சுவிடாம முடக்கு. அந்த சாமியான் எப்பிடிப் போனா ஒனக்கென்ன ன்னுகேட்டுட்டு அரங்கு வீட்டுக்குள்ள போயிப் படுத்துட்டா.

அவனுக்கு வச்சிருந்த கஞ்சிய எடுத்து கொண்டு போயி சாமியார சாப்பிட வச்சி, திண்ணையிலயே சாமியார படுக்க வச்சிட்டு, இவம் ராப்பட்டினியோட வந்துசூசுவா ன்னு படுத்துக்கிட்டாம்.

இப்படியே அரையும் குறையுமா குடிச்சி அந்த சாமியாரும் அந்த வீட்டோட ஒட்டிக்கிட்டாம்.

களத்துல தவசம்தானியம் அடிச்சிக்கிடந்தா புருசன் காரன்.அங்க ராக்காவலுக்கு பொயிருவாம்.இந்த சாமியாரு தாம் திண்ணையக் காத்துக்கிட்டு கிடப்பாம்.

ஒரு நா சாமியாருக்கு சரியான காச்சல் வந்து குளிரோட கிடந்தாம், அய்யோ பாவமேன்னு உள்ளெ கூப்பிட்டு படுக்க வச்சாங்க. அன்னயிலிருந்து சாமியாருக்குவீட்டுக்கு உள்ளதாம் படுக்க.

இந்த அப்புராணி புருசங்காரன் சாமியாருக்கு வேணுங்கிற பண்டுகமும் சவரட்சணையும் செய்தாம்.

இப்படி இருக்கயில,

காட்டுல கடலை எடுத்து குமிஞ்சி கிடக்கு. இவன் சாமியார துணைக்கு கூப்புடுதாம் ராக்காவலுக்கு.

எனக்கு வயித்து வலி தாங்க முடியலப்பா. நா இப்பதாம் சாவனோ பிறகுதாம் சாவனோ என்னால வரமுடியாதப்பா ன்னுட்டாம்.

சரீன்னு ராக்காவலுக்கு இவம் பொயிட்டாம். காவலுக்கு போனவனுக்கு உறக்கமே வல்ல. சாமியாரு வருத்தத்தோட சொன்னாரே இதுக்குள்ளசெத்துப்போயிருப்பானோ. நம் பொண்டாட்டி செத்த சவத்தோட பரிதவிச்சிகிட்டு கிடப்பளேன்னு ரோசிக்க ரோசிக்க கவலை அங்க இருக்க முடியல.

குமிஞ்சி கிடக்கிற கடலைய வீட்டுக்கும் கொண்டு போக முடியல. அந்த வருசம் கடலை நல்ல காய்ப்பு. கடலைய வித்து வீட்டுக் கூரையவும், கதவையும்மாத்திரணும்ன்னு நினைப்பு. இந்த சாமியாருக்கு குணமாயிட்டதுன்னா கூடமாட வேலைக்கும் வச்சிக்கிடலாம்.சாமியார இவ கண்ணுல கலங்காம வெடு வெடுன்னு விழுதாளென்னு கவலையா இருந்தது,

சாமியார வீட்டெ விட்டு வெளியே முடுக்கிருவாளோ ங்கிற பயம் வந்துட்டது, நினைச்சா எதுவும் செய்வா. ஏதொன்னுக்கும் ஒரு நட வீட்ட போயி எட்டிப்பாத்துட்டு வந்தாத்தாம் நிம்மதின்னு கிளம்பினாம். வீட்டுக் கதவுக்கு தாப்பா கிடையாது: கல்லு தாம்.

கல்ல நகட்டி மெல்ல கதவத் தொறந்தாம். சாமியாரக் காங்கல. விளக்க சுருக்கி வச்சிருந்தாலும் தெரிஞ்சது.

உள்ளெ போயிப் பாத்தா... சாமியார்ப் பயலும் இவளும் ஒரு தலையணையில தலை வச்சிப் படுத்திருக்காக!!

ஒரு மிதி விட்டாம் சாமியார. லேய் சிறுக்கி மவனே, இதுக்கலே நா ஒன்ன எம் வீட்டுக்குக் கூட்டியாந்தெம்? பசியால சாகக்கிடந்தவன தூக்கிட்டுவந்து எம் வயித்துக் கஞ்சிய ஒனக்குத் தந்தேனடா... தலை விரி கோலமாக் கிடந்த பொண்டாட்டி பாஞ்சி எந்திரிச்சா. இவனப்பாத்து எதுக்கு அவயம்போடுதெ. வாய மூடு: சத்தம் போடாதெ ன்னா.

இவன் சாமியாரப் பாத்து போடா வெளியே .. ன்னாம்.

அவரெ வெளி.ய போகச் சொல்ல நீ யாரு?ன்னு கேட்டா பொஞ்சாதி.

நா ஒம் புருசன். நீ எம் புருசன் கிடையாது. அவருதாம் இனி எம் புருசம். நீ ஒழுங்கா இருந்து எங்க பேச்ச கேட்டு வேல செஞ்சா, ஒரு வா கஞ்சி ஊத்துவேம்.சொத்து பூராவும் எம் பேர்ல இருந்ததுனால, நா போகச் சொன்னா நீ போய்த்தான் ஆகனும் ன்னு ஆணி அறைஞ்சது போல சொல்லிட்டா.

அதுல இருந்து இவன் ஊத்துன கஞ்சிய குடிச்சிட்டு ஏவுன வேலைய செஞ்சிக்கிட்டு வெளித் திண்ணையில கிடக்கது.

வந்தவம் வலுத்தாம்

இருந்தவம் இழந்தாம் ங்கிற

சொலவடை இதுல இருந்துதாம் பிறந்ததாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X