For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய் தமிழ் மன்ற விழாவில் சேரன்

By Staff
Google Oneindia Tamil News

அமீரகத் தமிழிணைய நண்பர்களின் 7ம் ஆண்டு விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கலந்து கொண்டார்.

துபாயில் அமீரகத் தமிழிணைய நண்பர்களின் 7ம் ஆண்டு விழா டிசம்பர் 7ம் தேதியன்று ஸ்டார் இண்டர்நேஷனல் பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. கணினியில் தமிழைப் பரவலாக்கும் முயற்சிக்காக 7 ஆண்டுகளுக்கு முன்னால் 10 தன்னார்வ நண்பர்களோடு துவங்கப்பட்ட இந்த அமைப்பு ஆண்டு தோறும் ஆண்டு விழா நடத்தி விழா மலரை வெளியிட்டு வருகிறது.

அமைப்பின் உறுப்பினர்களும், நிர்வாகிகளும் வேட்டி சட்டை அணிந்து மேடையேறிப் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் சிறுமியர் நடத்திய செவ்வியல் நடனங்களாலும் திரைப்பட பாடல்களுக்கான நடனங்களாலும் வண்ண மயமானது. தொடர்ந்து அமைப்பின் மூத்த உறுப்பினர் காமராஜன் வரவேற்புரையை நிகழ்த்தி முடிக்க சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு தலைவர் உரையை ஜெகபர் நிகழ்த்தினார்.

கடந்த காலங்களின் பாடங்களிலிருந்து புதிய உற்சாகத்துடனும், புதிய திட்டங்களோடு அமைப்பை வலுவானதாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர் பேசியதுடன், அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் பெயரை எளிதில் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் அமைப்பின் பெயர் அமீரகத் தமிழ் மன்றம் என மாற்றப்படுவதாகவும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டார் இண்டர்நேஷனல் பள்ளியின் இயக்குனர் கலந்தர் மீரான், தமிழ்ப் பள்ளிகள் துபாயில் இல்லாத அவலத்தைச் சுட்டிக்காட்டி தமிழர்கள் தமிழைப் பயிற்றுவிக்க தம் பள்ளியில் இடவசதி செய்து தர ஆயத்தமாக இருப்பதை அறிவித்தார்.

தொழிலதிபரும், திரைக் கலைஞருமான ஆர்கே என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் அமீரகத் தமிழ்மன்றம் எடுத்து நடத்துமேயானால் தமிழ்ப் பள்ளிக்காக ரூ.1 லட்சம் நன்கொடை தருவதாக வாக்களித்தார்.

அவரது உரையைத் தொடர்ந்து அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் விழா மலர் சேரன் அவர்களால் வெளியிடப்பட முதல் பிரதியை ஆர்கே பெற்றுக் கொண்டார்.

பின்னர் இயக்குநர் சேரன் பேசியதாவது,

குடும்பங்களோடு மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்க்கிறேன்.ஆனால், அவர்கள் எல்லாம் ஓரளவுக்கேனும் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். ஏதோ காரணத்துக்காகக் குடும்பத்தைப் பிரிந்து பல இன்னல்களுக்கு நடுவிலும் இங்கே தனியாக வாழும் தொழிலாளத் தோழர்களையும் வரவழைத்து அவர்களும் மகிழும் வண்ணம் விழா நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார்.

முகப் பூச்சற்ற கலைஞர்கள்தாம் எமக்கு வேண்டும் என்று என்னை இங்கு விரும்பி அழைத்தார்கள். இந்த அமைப்பு 2003ம் ஆண்டு நான் வந்தபோது இருந்ததை விட வலுவாக, அதை விட இன்னமும் மொழிப்பற்றோடு சிறப்பாக இயங்குகிறது.

இப்படியே இதனை வலுப்படுத்தி அமீரகத் தமிழ் மன்றம் என்பது ஒட்டு மொத்த அமீரகத் தமிழர்களின் குரலுக்கான அமைப்பாக வளரவேண்டும்.

இப்போது விழா அமைப்பாளர்கள் மட்டுமே வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கிறார்கள். அடுத்த முறை விழாவுக்கு வரும் நீங்களும் வேட்டி சட்டையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். தமிழர் விழா என்றால் அவர்கள் இப்படித்தான் வருவார்கள் என்பதை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.

அடுத்த ஆண்டு விழாவிற்கு என்னை முன்கூட்டியே அழைத்தால் நானாகவே வருவேன். நானும் வேட்டி சட்டை அணிந்து கலந்து கொள்வேன். இன்று முதல் என்னையும் அமீரகத் தமிழ் மன்றத்தின் உறுப்பினராக்கிக் கொள்ளுங்கள் என்றார்.

'கணினியில் தமிழ்' என்ற பல்லூடகக் காட்சி வழியாக கணினியில் தமிழை நிறுவுவது எப்படி என்று ஆசிப் மீரான் சுருக்கமான விளக்கங்களை வழங்கினார். விரைவில் சென்னை, புதுச்சேரியில் நடந்தது போன்ற பட்டறைகளை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார்.

தமிழகத்திலிருந்து வந்திருந்த 'காதல்' சுகுமார், மனோ, சசி, 'சாரல்' தேவா ஆகியோர் நிகழ்த்திய 'சிரிக்க வைப்பது யாரு? நிகழ்ச்சி பார்வையாளர்களை அரங்கிலேயே நகரவிடாமல் கட்டிப் போட்டது.

வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் துவங்கிய விழா நள்ளிரவு 12.30 மணிக்கு அமைப்பின் பொருளாளர் அகமது முகைதீன் நன்றி உரையுடன் நிறைவடைந்தது.

ஈடிஏ அஸ்கான் குழுமத்தின் இயந்திர மற்றும் மின்துறை பிரிவின் இயக்குனர் அன்வர் பாஷா உள்ளிட்டோரும் பேசினர்.

(தொகுத்து தட்ஸ்தமிழுக்கு வழங்கியவர் ஆசிப் மீரான்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X