For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் மீண்டும் சங்கமம் - ஒரு வாரம் நடக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

Chennai Sangamam
தமிழ் மையம் அமைப்பின் சார்பில் அடுத்த ஆண்டு நடத்தப்படும் சென்னை சங்கமம் திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து 2,000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த ஆண்டு சென்னை சங்கமம்-2008 திருவிழா ஜனவரி 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படும். முதல் விழாவை அடையாறு ஐ.ஐ.டி. திறந்த வெளி அரங்கத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இதில் 650 கலைஞர்கள் பங்கேற்பார்கள்" என்றார்.

மேலும் அவர் கூறியதாவது,

கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் சென்னையில் உள்ள பூங்காக்களிலும், வெளி அரங்குகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். எனது தலைமையில் நடக்கும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் மையம் அமைப்பு செய்து வருகிறது.

கடந்தமுறை நடந்த சங்கமம் நிகழ்ச்சிகளில் 725 நடன , இசை கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு 1,600 முதல் 2,000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். கரகாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், வில்லுப்பாட்டு போன்ற 60 விதமான கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்த ஆண்டு சென்னை சங்கமத்தில் முக்கிய அம்சமாக உணவு விழாவும் நடைபெறுகிறது. கடந்த முறை இந்த நிகழ்ச்சி இடம் பெறவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பல்வேறு வட்டாரங்களில் புகழ்பெற்ற உணவுகள் தயாரித்து வழங்கப்படும். செட்டிநாடு, விருதுநகர், கொங்கு உணவு விழா ஏற்பாடுகளை ஹாட்பிரட் நிறுவனத்தினர் தலைமையேற்று செய்து வருகின்றனர்.

இவ்விழாவில், சிறப்பு அம்சமாக 20க்கும் அதிகமான பள்ளிகளை சேர்ந்த 968 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மாணவர்களுக்கான நடன போட்டி ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. இதில் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, இளநிலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். விரும்புபவர்கள் ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

பல சிறந்த கலைஞர்கள் எங்கள் பார்வையில் படாமல் இருக்கிறார்கள். அவர்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26, 27 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அரங்கில் தேர்வு முகாம் நடைபெறும்.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் விழாவுக்காக தனியார், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆதரவுடன் ரூ.4 கோடி திரட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் நடத்தியது போக மீதி இருக்கும் பணம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க பயன்படுத்தப்படும்.

கடந்த ஆண்டு மீதமான நிதியை 22 தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கினோம். இந்த ஆண்டு மீதி பணத்தை அரசு பள்ளிகளில் நாட்டுப்புற கலை பயிற்சி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு கொடுப்போம்.

இது தேர்ச்சி பெற்ற கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும் அமையும். வரவு, செலவு கணக்கு கடந்த ஆண்டு போல பொதுமக்கள் முன்பு வெளிப்படையாக தெரிவிக்கப்படும்" என்றார் கனிமொழி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X