• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்-- - தந்தை பெரியார் (நவம்பர் 5, 1933 "குடி அரசு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். பெரியார் சுயமரியாதை பிரச்சாரநிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை - 600007 வெளியிட்டுள்ள பெரியார் களஞ்சியம் நூல் வரிசையின் ஐந்தாம்தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.50) வெளிவந்துள்ள கட்டுரை இது.)

By Staff
|

(நவம்பர் 5, 1933 "குடி அரசு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். பெரியார் சுயமரியாதை பிரச்சாரநிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை - 600007 வெளியிட்டுள்ள பெரியார் களஞ்சியம் நூல் வரிசையின் ஐந்தாம்தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.50) வெளிவந்துள்ள கட்டுரை இது.)

கர்ப்பத்தடையைப் பற்றி இந்நாட்டில் சுயமரியாதை இயக்கமும், குடியரசுப் பத்திரிக்கையும் சுமார் 7, 8 வருஷங்களுக்குமுன்பிருந்தே மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், வியாசங்கள், தலையங்கங்கள்மூலமாகவும் பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து வந்திருக்கின்றன.

Periyar மேல்நாடுகளிலும் கர்ப்பத்தடையைப் பற்றி சுமார் 70, 80 வருஷமாகப் பிரசாரம் செய்துவரப்படுவதாகவும் தெரியவருகிறது.

தோழர் பெசண்டம்மையார் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பாகவே கர்ப்பத்தடைப் பிரச்சாரத்தில் கலந்திருந்து பிரச்சாரம்புரிந்ததாகவும், மற்றும் கர்ப்பத்தடை பிரச்சாரமானது சட்ட விரோதமானதல்ல என்று வாதாடி கர்ப்பத்தடை பிரச்சாரத்துக்குஅரசாங்கத்தை அனுமதிக்கும்படி செய்ததாகவும், அவ்வம்மையார் சரித்திரத்திலிருந்தும் விளங்குகிறது.

இவைகள் மாத்திரமல்லாமல் மேல்நாடுகளில் இன்றும் பல தேசங்களில், தனிப்பட்ட நபர்களாலும், சங்கங்களாலும் கர்ப்பத்தடைபிரசாரங்களும், அது சம்மந்தமான பத்திரிக்கைகளும், புத்தகங்களும் ஏராளமாய் இருந்துவருகின்றன. இவைகளையெல்லாம்விட மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்ய பல அரசாங்கங்கள் அதற்கென ஒருஇலாக்காவை ஏற்படுத்தி அதன்மூலம் பிரசாரங்கள் செய்து வருகின்றன. மற்றும் அநேக இடங்களிலும் வியாபார ஸ்தலங்களிலும்கர்ப்பத்தடைக்கு ஏற்ற சாதனங்கள் விற்கவும் படுகின்றன.

இந்தப்படி உலகத்தில் பல்வேறு இடங்களில் பல விதங்களாக கர்ப்பத்தடை பிரசாரங்கள் நடந்து பெரிதும் அனுபவ சாத்தியமாகிப்பலர் அதன் பயனைத் தனிப்பட்ட முறையில் அடைந்து சுகத்தையும், க்ஷேமத்தையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

எனவே கர்ப்பத்தடைப் பிரச்சாரமும், முறையும், உலகமெல்லாம் பரவி மிகுதியும் செல்வாக்கடைந்த பிறகு இப்போதுதான் நமதுநாட்டில் கர்ப்பத்தடை என்பதைப் பற்றி எண்ணவும், பேசவும் சிலர் துணிந்து முன் வந்திருக்கிறார்கள்.

அதுவும் இந்திய நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், சமூக வாழ்க்கைச் சுதந்திர ஆதாரம், உடல்கூறு ஆதாரம் முதலியவைகளின்தாழ்ந்த நிலைமைக்குப் பரிகாரம் செய்ய வேறு எத்தனையோ வழிகளில் பல நிபுணர்களும், தலைவர்களும் வெகு காலமாகமுயற்சித்தும் பயன்படாமல் போனபிறகே வேறு வழியில்லாமல் இந்த உண்மையைப் பின்பற்ற வேண்டியவர்களானார்கள்.

இந்தக் கர்ப்பத்தடை பிரச்சினையில் குழந்தைகளே இல்லாதவர்களான "வறடர்"களும், முட்டை இட்டு குஞ்சுகள் பொரிப்பதுபோல ஏராளமான அதாவது 10 பிள்ளைகள் 20 பிள்ளைகள் பெற்றவர்களாகிய "புத்திர பாக்கியம்" உடையவர்களும், சட்டசம்மந்த நிபுணர்களும், மத சம்மந்தமான நிபுணர்களும், டாக்டர்களும் தாராளமாய் கலந்திருப்பது கர்ப்பத்தடை வெற்றிக்குஅறிகுறியென்றே சொல்லவேண்டும். ஆனால் கர்ப்பத்தின் பயனால் வேதனையடைந்து கஷ்டப்பட்டு, தொல்லைப்பட்டுஅடிமைகளாக வாழும் பெண் மக்கள் போதிய அளவு வெளிவந்து இப்பிரச்சினையில் கலந்து ஆதரவளிக்காதது வருந்தக்கூடியவிஷயமானாலும் பெண்கள் தங்களைத் தாங்களே பாபஜன்மம் என்றும், கீழான பிறவி என்றும் பிறவியிலேயே பிரம்மனால்விபச்சாரிகளாக பிறப்பிக்கப்பட்டு விட்டதால் என்றென்றும் புருஷர்களுக்கு அடிமையாய் இருந்து அவர்களது காவலிலேயேவாழ்ந்து தீர வேண்டியவர்கள் என்றும், பேதைகள் என்றும் கருதிக் கொண்டிருக்கின்ற பிறவிகளான பெண்கள் இம்மாதிரியானகாரியங்களில் கலந்து கொள்ளாததற்கு ஆகவும் இக்கஷ்டங்களிலும், கொடுமையிலும் தொல்லையிலும் இருந்துவிடுதலையாவதற்கு முயற்சியெடுத்துக் கொள்ளாததற்காகவும் இவர்கள்மீது குறைகூறுவது, இருட்டில் ஏன் வெளிச்சமிலை என்றுகேட்பதையே யொக்கும்.

ஆனபோதிலும் ஏதோ இரண்டொரும் ஸ்திரீகள் கலந்திருப்பதையும், சுயமரியாதை இயக்கத்தில் மாத்திரம் அநேக ஸ்திரீகள்கர்ப்பத்தடை பிரசாரம் செய்து வருவதையும் பார்க்கும்போது ஒரு அளவுக்காவது மகிழ்ச்சி அடைய வேண்டியது நியாயமாகும்.

நிற்க, நமது பிரச்சாரத்தின் பலனாகவும், மற்றும் பலர் முயற்சியாலும் நமது சென்னை மாகாணத்தில் அரசாங்கமானதுகர்ப்பத்தடையின் அவசியத்தை உணர்ந்து அரசாங்க வைத்திய ஸ்தாபனங்கள் மூலமாகக் கர்ப்பத்தடை பிரச்சாரம் செய்துபார்க்கலாம் என்கின்ற எண்ணங் கொண்டவுடன் மனித சமூகப் பொறுப்பற்ற பிற்போக்குவாதிகள் மதத்தின்பேரால் கர்ப்பத்தடைகொள்கையையும், பிரச்சாரத்தையும் கண்டிக்கப் புறப்பட்டு கூப்பாடு போடுகிறார்கள் என்பதைக் கேட்க யாரும் வருந்துவார்கள்.

அப்படிப்பட்ட எதிர் பிரசாரங்களில் ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவர்கள் தான் முதன்மையானவர்கள், கடையானவர்களுமாய்இருக்கிறார்கள் என்றால் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள். ஏனெனில், இந்தக் கூட்டத்தாருக்கு அறிவைப் பற்றியோ,மனிதத்தன்மையைப் பற்றியோ, பிரத்தியக்ஷ பிரமாணங்களைப் பற்றியோ சிறிதும் கவலை கிடையாது.

இவர்கள் மனித சமூகத்தைமிருகங்கள் என்றும், அடிமைகள் என்றும் கருதி கேவலமாய் நடத்தும் முரட்டு மூர்க்கக் கொள்கையைக் கையாளுகிறவர்கள்.சுருங்கக் கூறுவதானால் ரோமன் கத்தோலிக்கர்கள் பிற மனிதர்களைப் பாவிப்பதிலும், பிற மனிதர்களிடம் நடந்து கொள்வதிலும்,பிற மனிதர்களை மதிப்பதிலும் இந்தியத் தென்னாட்டுப் பார்ப்பனர்களைவிட மிக மோசமானவர்கள் என்றும் அவர்களதுமதக்கொள்கையும் தென்னாட்டுப் பார்ப்பன மதத்தைவிட மிகமிக மோசமும், முட்டாள்தனமும், சுயநலமும் கொண்டவைகள்என்றும் சொல்லலாம்.

மேலும் தங்கள் வாழ்வுக்கும், தங்கள் மேன்மைக்கும் பார்ப்பனர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பாகக் கூட மனித சமூகத்தைஎவ்வளவு கேவலமாக, சூட்சியாக, முட்டாள்தனமாக, கொடுங்கோன்மையாக, நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதற்கு அவர்களதுவேதங்களும், புராணங்களும், அரசியல் சட்டங்களும், "தர்ம" சாஸ்திரங்களும் ஆதாரமாய் எடுத்துக்காட்டாய் இருந்துவருகின்றனவோ, அதுபோலவே கத்தோலிக்கர்களின் சரித்திரமும் இருந்து வந்திருக்கின்றது. இருந்தும் வருகின்றது என்றும்சொல்லவேண்டியிருக்கிறது.

அவர்களுடைய தற்கால யோக்கியதைகளை உணரவேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அவர்கள் நடந்துகொள்ளும் மாதிரியில் இருந்தே ஒருவாறு உணரலாம். ஆதலால் தான் இப்படிப்பட்ட எதிர்ப்பிரச்சாரம் செய்யப்புறப்பட்டிருப்பதில் யாருக்கும் ஆச்சரியம் இருக்க நியாயமில்லை. ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் கர்ப்பத்தடையைஎதிர்ப்பது என்பது இன்று நேற்றல்ல. வெகுகாலமாகவே எதிர்த்து வந்திருக்கிறார்கள். அதே புத்தியை இந்தியாவிலும்காட்டியிருக்கிறார்கள்.

கர்ப்பத்தடையை இவர்கள் எதிர்ப்பதற்கு ஒரு இடத்திலாவது பகுத்தறிவுக்குப் பொருத்தமான நியாயத்தையோ, மனித சமூகநன்மைக்கு ஏற்றதான நியாயத்தையோ எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க இவர்களால் இதுவரை முடியாமலே போய் விட்டது.மற்றபடி இவர்களது எதிர்ப்புக்கு உள்ள ஆதாரங்கள் எல்லாம் மதத்தை அடிப்படையாகக்கொண்ட ஆதாரங்களே ஒழியவேறில்லை.

பகுத்தறிவு ஆதாரமும், விஞ்ஞான ஆதாரமும், பிரத்தியட்ச அனுபவ ஆதாரமும் இல்லாத எவ்வித எதிர்ப்புகளிலும் தடைகளிலும்பெரும்பாலும் சூட்சிகளும், புரட்டுகளும், சுயநலங்களும், பித்தலாட்டங்களுமேதான் மறைந்திருக்கின்றன என்பதேநமதபிப்பிராயம். அதிலும், இம்மாதிரியான எதிர்ப்புகள் மதத்தின் பேரால் ஏற்பட்டு நன்மையான காரியங்களுக்கெல்லாம்முட்டுக் கட்டையாயிருக்குமானால் அதில் சுயநலமும், சூட்சியும், புரட்டும், பித்தலாட்டமும் மாத்திரமல்லாமலும் பெரும்பாலும்அயோக்கியத்தனங்களுக்கு ஆதரவு தேடும் தன்மையும் இருக்குமென்பதும் நமதபிப்பிராயமாகும்.

இந்தக் காரணங்களால்தான் மனிதனுக்கு அறிவும், பிரத்தியட்ச அனுபவமும், பஞ்சேந்திரிய உணர்ச்சியின் பலாபலனும் இருக்கும்போது இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாததும் இவைகளுக்கு மாறுபட்டதுமான மதம் என்பது எதற்காக உலகில்இருக்கவேண்டுமென்பது நமது முதல் கேள்வியாகும். அதனாலே தான் இப்படிப்பட்ட மதங்கள் என்பவைகள் எல்லாம் ஒழியவேண்டும் என்று முழுமூச்சுடன் நாம் போராடி வருகின்றோம். சிறிது காலத்துக்கு முன் கடவுள் பேரால் தேவதாசிகள் என்கின்ற ஒருமுறை இருக்கக்கூடாது என்று ஒருவித கிளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தேசபக்தர்கள் பலர்தேவதாசி தன்மை ஒரு மேலான தன்மையென்றும், அது கடவுள் கைங்கரியமென்றும், அதனால் புண்ணியமுண்டு என்றும்கூப்பாடு போட்டது அநேகருக்கு ஞாபகமிருக்கும்.

அதற்குப் பதில் அளிக்கும் முறையில் நாம் "அப்படிப்பட்ட காரியத்தைமேலானதும், சிரேஷ்டமானதும், புண்ணியமானதுமான காரியத்தைப் புண்ணியத்தில் நம்பிக்கை உள்ள வகுப்பார்கள் தங்கள்குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு கொடுத்து இப்பொழுது தேவதாசிகளாய் இருக்கின்ற பெண்களைக் குடும்பப் பெண்களாகஏன் ஆக்கிவிடக்கூடாது"? என்று கேட்ட பிறகு அந்தச் சமாதானத்தை விட்டு, "தேவதாசிகள் என்கின்ற வகுப்பை ஒழித்து விடுவதுமதத்திற்கும், ஆகமத்துக்கும் விரோதமானது" என்று சொல்லி வந்தார்கள்.

இதற்கும் பதில் குடிஅரசு சொல்லும் வகையில் "மனிதத்தன்மைக்கும், சுயமரியாதைக்கும், மதமும், ஆகமமும் விரோதமாய் இருந்தால் எதை ஒழிப்பது" என்று கேட்ட போது தோழர்சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் "ராமசாமியும், வரதராஜூலுவும் இன்றைக்குத் தேவதாசியை வேண்டாமென்று சொல்வார்கள்.நாளைக்கு கோவிலுக்குப் பூஜை செய்ய அர்ச்சகரே வேண்டாமென்று சொல்லுவார்கள். ஆதலால் மதத்துக்கும், ஆகமத்துக்கும்சிறிதும் விரோதமான காரியம் எதுவும் செய்யக்கூடாது" என்றார்.

இதன்பிறகு தான் இந்துமதத்தின் யோக்கியதை முன்னையைவிடஅதிகமாக சந்தி சிரிக்க ஏற்பட்டு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் செய்ய முடிந்ததுடன், சாரதா சட்டம் செய்யவும் சுலபமாய்முடிந்து விட்டது. பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டு சில முஸ்லீம்கள்கூட குழந்தைகளைக் கல்யாணம் செய்து கொண்டுகாரியாதிகளைச் செய்வதைத் தடுக்கும் படியான சட்டம் செய்வது முஸ்லீம் மதத்துக்கு விரோதம் என்பதாக போட்ட கூச்சல்கள்கூடலட்சியம் செய்வாரற்று குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டது.

ஆகவே, தேவதாசி ஒழிப்பு, குழந்தை மணம் ஒழிப்பு, கர்ப்பத்தடை ஆகிய விஷயங்களுக்கு எதிர்ப்புகள் எல்லாம் மதங்களின்முட்டாள்தனங்களையும் அவற்றிற்குள் அடங்கிகிடக்கும் மோசங்களையும், சூக்ஷPadma_vowelsn_Iகளையும் வெளிப்படுத்த ஒரு தக்க சாதனமாய்ஏற்பட்டிருப்பதற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம். ஏனெனில் இவற்றின் மூலம் மதங்கள் மனித சமூக நன்மையை விட -சுகாதாரத்தை விட - உடற்கூற்றின் தத்துவ நிலையை விட - பொருளாதர நலத்தைவிட வேறுபட்டதாகவும், முக்கியமானதாகவும்பாவிக்கப்படுகின்றனவென்பதை உலகம் அறியச் செய்துவிட்டது. ஆதலால் மதத்தின் பேரால் வரும் எதிர்ப்புகள் எல்லாம்மதங்களை ஒழிக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு அனுகூலம் என்றே கருதி வரவேற்போமாக.

நிற்க, கர்ப்பத்தடை முறையை கத்தோலிக்கர் மதத்தின் பேரால் எதிர்ப்பதில் மூன்று முக்கிய காரணங்கள் எடுத்துச்சொல்லிவருகிறார்கள்.

1. கடவுளுக்கு விரோதமாம்.

2. வேதத்துக்கு விரோதமாம்.

3. இயற்கைக்கு விரோதமாம்.

இந்த மூன்று காரணங்களும் முற்றும் முட்டாள்தனமும், மோசமும் நிறைந்த கற்பனைக் காரணங்கள் என்பதுடன் முன்னுக்குப் பின்முரணான காரியங்கள் என்பதுமாகும் என்பதே நமதபிப்பிராயம்.

எழுத்தாக்க உதவி: ஆசாரகீனன்(aacharakeen@yahoo.com)

நன்றி: திண்ணை

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mr_anusiram@yahoo.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X