For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கர் படத்திற்கு அலைமோதிய மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

Sathyaraj
தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தைக் காண தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தங்கர்பச்சான் இயக்கத்தில், சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி ஆகியோரின் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் 'ஒன்பது ரூபாய் நோட்டு'.

குத்துப் பாட்டு, வெட்டுச் சண்டை, ஆபாச வசனங்கள், அரை குறை நடிகைகள், அர்த்தமற்ற காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள் என வழக்கமான தமிழ் சினிமாவுக்குரிய இலக்கணம் எதுவும் இல்லாமல், தமிழகத்து கிராம வாழ்க்கையின் நிதர்சனம், நட்பின் இலக்கணம், மத நல்லிணக்கம் என பல நல்ல விஷயங்களைத் தாங்கி உருவாகியுள்ள இந்த நல்ல படத்தைத் திரையிட, நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் வெறும் 30 தியேட்டர்களில் மட்டுமே இப்படத்தைத் திரையிட முடிந்தது.

தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு படத்துக்கு தியேட்டர் இல்லை என்ற வேதனையை பொறுக்க முடியாமல் தங்கர் பச்சான் குமுறிக் கொண்டிருந்த நிலையில்தான், அதைக் கேள்விப்பட்டு தமிழகம் முழுவதும் தங்களது கட்டமைப்பில் உள்ள 100 தியேட்டர்களில் இப்படத்தை இலவசமாக திரையிட பிரமீட் சாய்மீரா நிறுவனம் முன்வந்தது.

இதையடுத்து பகல் 11 மணிக்கு ஒன்பது ரூபாய் நோட்டு படம் தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்படத்தைக் காண வரும் மக்கள் முன்கூட்டியே கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. தியேட்டருக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில், படத்தைப் பார்த்து விட்டு வந்த பின்னர் தங்களுக்கு இஷ்டப்பட்டதை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து பெருமளவில் பாசிட்டிவான விமர்சனங்கள் ஏற்கனேவ மீடியாக்களில் வெளியாகியிருந்ததால் மக்கள் கூட்டம் அலை மோதியது. இலவசமாக பார்க்கப் போகிறோம் என்று வராமல், உண்மையான ஆர்வத்துடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

ஆயிரக்கணக்கில் குவிந்த மக்களைப் பார்த்த தியேட்டர் நிர்வாகிகள் பெரும் ஆச்சரியமடைந்தனர். பெரும்பாலானவர்கள் காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, விஜய் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டிருந்த தியேட்டர்காரர்களுக்கு ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்து பெரும் வியப்பு ஏற்பட்டது.

பெரும்பாலான ரசிகர்களுக்கு இடம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இருந்தாலும், டிக்கெட் கொடுத்தாவது இந்தப் படத்தை பார்த்தே தீருவோம் என்று அவர்கள் கூறிச் சென்றதைக் காண முடிந்தது.

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் தங்கர் பச்சான், சத்யராஜ் ஆகியோர் வருகை தந்து பார்வையாளர்களை குஷிப்படுத்தினர். படம் போடுவதற்கு முன்பு தங்கர் பச்சான் பார்வையாளர்களுக்கு கரங்கள் கூப்பி வணக்கமும், நன்றியும் தெரிவித்துப் பேசினார். அவர் கூறுகையில், நமது நாட்டில் 80 சதவீதம் பேர் விவசாயிகள்.

நமக்காக வியர்வையைச் சிந்தி நெல்லைக் கொடுக்கும் விவசாயிகள் தினசரி ஒரு வேளை சாப்பாட்டைக் கூட சரியாக சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் நாம் விவசாயிகள் குறித்து ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை.

சினிமா நடிகர்களின் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறோம், ரத்ததானம் செய்கிறோம்.

கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அந்த மக்களின் உண்மையான வாழ்க்கையை திரைப்படங்களில் பதிவு செய்யத் தவறி விட்டோம். பாரதிராஜா போன்றவர்கள் வந்த பிறகுதான் அந்த நிலை மாறியது.

மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் அமெரிக்காவிலும் திரையிடப்படுகிறது. மீடியாக்கள் இந்தப் படம் குறித்து நல்லபடியாக விமர்சனம் செய்துள்ளன. இதை மதிக்கிறேன், வணங்குகிறேன்.

பிரமீட் சாய்மீரா நிறுவன நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு மக்கள் கருத்தை அறிய விரும்பினார். படம் பார்த்து விட்டு பணத்தை உண்டியலில் போட செய்தன் மூலம் மக்கள் கருத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால் பின்னர் மக்கள் கருத்துதான் வேண்டும், பணம் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. எனவே இதை இலவசமாகவே திரையிடுகிறோம்.

ஒன்பது ரூபாய் நோட்டு ஸ்வீடன், ஜப்பான், ஜெர்மனி மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது என்றார். அதைத் தொடர்ந்து படம் திரையிடப்பட்டது.

படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்களால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக பெண்கள் கண்களில் தாரை தாரையாக வழிந்த நீரை கட்டுப்படுத்தக் கூடத் தோன்றாமல் பார்த்ததைக் காண முடிந்தது.

சந்தோஷமாக படத்தைப் பார்க்கப் போன ரசிகர்கள், படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தபோது கண்களில் கண்ணீர் ததும்ப திரும்பினர்.

படம் குறித்து அவர்கள் கூறுகையில், இதுதான் படம், இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஏதோ நம்மையே பார்த்துக் கொள்வது போல இருக்கிறது. மிக மிக இயல்பாக, தத்ரூபமாக எடுத்துள்ளார் தங்கர் பச்சான். சத்யராஜ் இதற்கு முன்பும் இதுபோல நடித்ததில்லை, இனிமேலும் அவரால் இப்படி நடிக்க முடியாது. நடித்தார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இப்படிப்பட்ட படம்தான் வேண்டும். இது படம் அல்ல, நல்ல பாடம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்.

படத்தைப் பார்த்து விட்டு வந்த ரசிகர்களுக்கு இன்னொரு ஆச்சரியமாக சத்யராஜ், படத்தில் வருவதைப் போல தலப்பாக்கட்டு, வேட்டி, துண்டு, குச்சி சகிதம் தோன்றினார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

அவர்களிடம் சத்யராஜ் பேசுகையில், இது வெற்றிப் படமா, தோல்விப்படமா என்று கேட்டார். அதற்கு ரசிகர்கள், சாதாரண வெற்றி இல்லை, அமோக வெற்றி என்று சந்தோஷமாக குரல் கொடுத்தனர்.

தொடர்ந்து சத்யராஜ் பேசுகையில், நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். இந்தப் படத்தைப் பற்றி உங்களது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் கூறுங்கள். போன் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும், அனைத்து வகைகளிலும் அவர்களுக்குச் சொல்லிப் படத்தைப் பார்க்கக் கூறுங்கள்.

உங்கள் அனைவரின் சார்பாகவும் தங்கர் பச்சானுக்கு மக்கள் இயக்குநர் என்ற பட்டத்தை நான் இப்போது கொடுக்கிறேன் என்று கூறினார்.

இதைக் கேட்டதும் கூட்டத்தினர் உற்சாகமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட தங்கர் அமைதியாக அமர்ந்திருந்தார். கண்களில் மட்டும் நீர் எட்டிப் பார்த்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X