• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஜெயகாந்தன்': இளையராஜாவின் டாகுமெண்டரி

By Staff
|

எழுத்துலகில் யாரும் தொட முடியாத உச்சத்தில் வீற்றிருக்கும் ஜெயகாந்தனுக்கு இது பவளவிழா ஆண்டு.

அதைத் தன் பாணியில் கொண்டாடுகிறார் இசைஞானி இளையராஜா! ஆம், தன் சொந்த செலவில் 'எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்' எனும் ஆவணப் படத்தைத் தயாரிக்கிறார்.
ரவி சுப்ரமணியன் என்பவர் இயக்கும் இப்படத்துக்கு, செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முறுக்கு மீசையும் அதைவிட மிடுக்கான எழுத்து நடையும் ஜெயகாந்தனின் அடையாளங்கள். அமெரிக்காவின் சிகாகோ சர்வதேச நூலகத்தில் முதல்முறையாக இடம் பெற்ற தமிழ் நூல்களுக்குச் சொந்தக்காரர் நம் ஜெயகாந்தன்தான்.

எதையும் ஒளிவு மறைவின்றி எழுதும் பேசும் இந்த எழுத்துச் சிங்கம், இந்த ஆண்டு 75-வது வயதில் அடி எடுத்து வைக்கிறது. ஆனால் இப்படி ஒரு விஷயமே தனக்குத் தெரியாது என்பது போல அமைதியாய் இருக்கிறார் ஜெயகாந்தன்.

ஆனால் அவரது ரசிகர்களால், ஆதர்ஸ வாசகர்களால் அப்படி இருந்துவிட முடியுமா... அவர் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும், அவரது பவள விழாவைக் கொண்டாடும் ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.

வண்ணமிகு ஆடம்பரங்கள், வார்த்தை ஜாலங்கள் கொண்ட ஒரு வழக்கமான விழாவாக ஜே.கே.வின் 75வது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில் என்ன சிறப்பிருக்கிறது, ஒரு நாள் கூத்து என்பதைத் தவிர.

எனவே அதை அர்த்தமுள்ள விதத்தில் பதிவு செய்ய இசைஞானி இளையராஜா எடுத்துள்ள முயற்சிதான் ஜெயகாந்தனைப் பற்றி இந்த ஆவணப் படம்.

இதில் ஜெயகாந்தனின் பின்னணி, சாதனைகள், எழுத்துலகில் அவரது தாக்கங்கள், அவர் பெற்றுள்ள விருதுகள், அவரது சூறாவளி மேடைப் பேச்சுகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார் இளையராஜா.

ஜெயகாந்தன் இதில் ஜெயகாந்தனாகவே தோன்றுகிறார் என்பதுதான் இதன் சிறப்பு. இந்தப் படத்துக்காக இளையராஜா, ஜெயகாந்தனைச் சந்தித்து உரையாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முறை, அடடா இதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் எழும். எனக்கும் அப்படி ஒரு ஆதங்கம் அண்ணன் ஜெயகாந்தனைப் பற்றி எண்ணும்போது எழுந்த்து. அதன் விளைவுதான் இந்த ஆவணப்படம்.

எனக்கும் அண்ணன் ஜெயகாந்தனுக்கும் உள்ள தொடர்பை எந்தமாதிரி வார்த்தைகளில் விவரிப்பது என்று தெரிவில்லை. அவரை பலருக்கு ஒரு கோபக்கார சிங்கமாகத்தான் தெரியும். இல்லை..குணத்தில் அவர் தங்கம். அவரோடு... அவருடைய வட்டத்துக்குள் வந்துவிட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது.

என் அண்ணன் பாவலர் மூலம் நானும் என் சகோதரன் அமரும் (கங்கை அமரன்) மிகச் சிறு வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சி கலைஞர்களாக ஊர் ஊராக இசைக் கச்சேரிகள் நடத்தி வந்தோம். அப்போது அண்ணன் ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிக முக்கிய தூண் மாதிரி. கருத்துச் செறிவும் வேகமும் நிறைந்த அவரது பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அந்தக் காலங்கள் இன்னும் மனதில் பசுமையாய் நிழலாடுகின்றன என்கிறார் ராஜா நெகிழ்வுடன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X