For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்க இலக்கிய விழா

By Staff
Google Oneindia Tamil News

கடந்த 8ம் தேதி (திருவள்ளுவர் ஆண்டு 2039 சித்திரை 28) தமிழ்த் தாத்தா நினைவு நாள் இலக்கிய விழா பிரான்சில் நடந்தது. லா கூர்நெவ் என்ற பாரிஸ் புறநகரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்த விழா நடந்தது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட விழா மணடபத்தில் ஏராளமான திரண்டிருக்க விழாவைத் தொகுத்து வழங்கி அமர்வுகளை தலைமை தாங்கி நடத்தினார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.

தட்சிணாமூர்த்தி இணையர் மங்கல விளக்கு ஏற்றினர். 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்று தொடங்கும் பாரதிதாசனின் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகப் பாடப்பட்டது. (இப்பாடலே புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகும்).

முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார்.

முதலில், கவிஞர் கி. பாரதிதாசன் தம் கவிதையைப் படித்தார்.
அடுத்து தேவகுமரன் தம் வாழ்த்துரையை வழங்கினார். ரெயூனியன் என்ற பிரஞ்சுத் தீவில் பிறந்து வளர்ந்து வந்தவர் அவர். அங்கே தமிழர்கள் தாய் மொழியாம் தமிழைத் தம் இளைய தலைமுறைக்குத் தராமல்; போனதால் இளைய தலைமுறை தமிழறியாமல் தடுமாறும் அவலத்தை உருக்கமாக எடுத்துரைத்தார்.

பிரான்சில் வாழும் தமிழர்களாவது விழித்தெழுந்து விழிப்புடன் தமிழைப் பேணி இளைய தலைமுறைக்கு அதனை ஊட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அடுத்துப் பேசிய யோகானந்த அடிகள் தமிழ்த் தாத்தாவின் வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளைத் தொட்டுப் பேசினார். புலவர் வ. கலியபெருமாள் தம் உரையைக் கட்டுரையாகவே தயாரித்துக் கொண்டு வந்திருந்தார்.

தமிழ்த் தாத்தாவைப் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டிய புலவர், சிலப்பதிகாரத்தைப் பதிப்பிப்பதில் தாத்தா பட்ட துன்பங்களையும் இறுதியில் அவர் அவற்றைச் சமாளித்த விதங்களையும் தெளிவாக விளக்கினார்.

ஓவியர் அண்ணாதுரையின் 60ம் ஆண்டு நிறைவைப் பாராட்டும் வகையில் பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டார். திருமதி அண்ணாதுரைக்கு பூங்குழலி பெருமாள் பொன்னாடை போர்த்தினார்.

உடனடியாக, இரண்டாம் அமர்வு தொடங்கியது. லியோன் என்ற தொலை தூர நகரிலிருந்து வந்திருந்த கவிஞர் மாமல்லன் தமிழ்த் தாத்தாவின் தொண்டுகளைப் பாராட்டிக் கவிதை படித்தார். தொடர்ந்து கவிதை படிக்க வந்த கவிஞர் பூங்குழலி பெருமாள் நல்ல ஓட்டமும் பொருள் ஊட்டமும் கொண்ட தம் கவிதைகளை இனிய குரலில் வாசித்து அவைக்குச் சுவை கூட்டினார்.

புலவர் பொன்னரசு தமிழ்த் தாத்தாவின் தொண்டுகளைப் பற்றிக் கூறி அவர் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம பிள்ளை அவர்களுக்கும் தமிழ்த் தாத்தாவுக்கும் இருந்த குரு, சீடர் உறவினைச் சிறப்பாகப் புலப்படுத்தினார்.

அடுத்து, தள்ளாத வயதிலும் உள்ளம் கொள்ளாத தமிழ்க் காதல் கொண்டு உலாவும் முதுபெருங் கவிஞர் கண.கபிலனார் கண கபிலனார் தம் கவிதையை அருவியாகப் பொழிந்தார்.

இலக்கணம் இலக்கியம் இரண்டுக்கும் உள்ள தொடர்பினைக் கவிதையில் புலப்படுத்திய அவர், கவிதை எழுதும்போது இலக்கணத்தையோ கவிதையையோ நினைக்கக் கூடாது என்ற தத்துவத்தை உரைத்தபோது அவை முழுக்கக் கையொலி.

தொடர்ந்து ஆசிரியர் பி. சின்னப்பாவும், பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும் சிறப்புரை வழங்கினார்.

பின்னர் பலகுரல் மன்னன் மோரோ நடராசனின் நிகழ்ச்சி நடந்தது.

இறுதியாக கோவிந்தசாமி செயராமன் அனைவர்க்கும் நன்றி கூறி அடுத்த ஆண்டுச் சிறப்பாக நடைபெற இருக்கும் இலக்கிய விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X