For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களுக்கு தமிழ் மீது நம்பிக்கையில்லை-நந்தலாலா

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தமிழர்களுக்கு தாய்மொழி மீது நம்பிக்கை இல்லாதது வேதனையளிக்கிறது என்று கவிஞர் நந்தலாலா கூறினார்.

தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள கிளாசிக் மகாலில் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்புவிழா நடந்தது. விழாவில் மண்டல தலைவர் (நியமனம்) அருணாசலம், வட்டார தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னாள் மாவட்ட ஆளுநர் முகமது ரபி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட பழனியப்பனிடம், உடனடி முன்னாள் தலைவர் ராம் சங்கர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பாலசுந்தரம் செயலாளராகவும், ராமகிருஷ்ணன் பொருளாளராகவும், ராஜப்பா, மூர்த்தி, பால்ராஜ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், அன்புதாசன் துணைச் செயலாளராகவும், அண்ணாமலை துணைப் பொருளாளராகவும், குணசேகரன் உறுப்பினர் வளர்ச்சி தலைவராகவும், லெனின், கண்ணையா ஆகியோர் உறுப்பினர் வளர்ச்சி துணைத் தலைவர்களாகவும், ரமேஷ் லயன் அடக்குநராகவும், வெங்கடேசன் லயன் முடுக்குநராகவும், கார்த்திகேயன் மக்கள் தொடர்பு அலுவலராகவும், ஸ்ரீதர் அய்யாசாமி இதழ் ஆசிரியராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

கவிஞர் நந்தலாலா பேச்சு:

சிறப்பு விருந்தினராக கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிர்ஷ்டத்தை விட முயற்சிதான் ஒரு மனிதனுக்கு முக்கியம். முயற்சி இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் முதன் முதலாக பாடச் சென்றபோது 11 முறை மின் தடை ஏற்பட்டதாம். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு, தைரியமாக அவர் முதல் பாடலை பாடியதால்தான் இன்று இந்தியாவிலேயே அதிகப்பாடல்களை பாடிய பாடகராக இருந்து கொண்டு இருக்கிறார்.

பாண்டிச்சேரியில் நிற்க முடியுமா?:

கவியரசு கண்ணதாசனும், கலைஞர் கருணாநிதியும் நெருங்கிய நண்பர்கள். எந்த அளவிற்கு என்றால் ஒருவர் கையை மடித்து வைக்க, மற்றொருவர் அந்த கையில் தலைவைத்து படுக்கும் அளவுக்கு.

ஒரு முறை கருணாநிதியிடம் சென்று நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கண்ணதாசன் கேட்டாராம். எந்த ஊரில் நிற்கப் போகிறாய் என்று கருணாநிதி கேட்டபோது, பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன் என்று கூறினார்.

உடனே கருணாநிதி, பாண்டிச்சேரியில் உன்னாலே நிற்க முடியாதே என்று பதில் கூறினாராம். என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும்.

கலைஞர் கருணாநிதியின் தூக்குமேடை நாடகம் தஞ்சை கொடிமரத்து மூலையில்தான் அரங்கேற்றப்பட்டது. நடிகவேள் எம்.ஆர். ராதா தனது கைப்பட எழுதி கருணாநிதிக்கு கலைஞர் பட்டத்தை இதே தஞ்சையில் தான் கொடுத்தார்.

சினிமாவில் சிங்கம்-மான்:

தமிழ் சினிமாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை. வில்லன் கதாநாயகியை விரட்டும்போது மானை சிங்கம் விரட்டுவது போல் காண்பிப்பார்கள். வில்லன் கதாநாயகியை கற்பழிப்பதற்காக விரட்டுகிறான். சிங்கம் மானை கற்பழிக்கவா விரட்டுகிறது. சாப்பிடுவதற்காக தானே விரட்டுகிறது.

கற்பழிப்பு காட்சிக்கு, சாப்பாட்டு காட்சியை ஒப்பிட்டு, சம்பந்தமே இல்லாமல் காட்டுகின்றனர். இந்த காட்சியைக் கூட நாம் ரசித்து கை தட்டிப் பார்க்கிறோம்.

தொலைக்காட்சியில் அரைகுறை ஆடையுடன் ஆடும் நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிறோம். இப்போது எல்லா கட்சிகளும் தங்களுக்கு என்று தொலைக்காட்சியை தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி இல்லாத கட்சி அனாதை கட்சி போல் ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் அறிவோடு இருந்தால் ஆபத்து. கொஞ்சம் அறிவு இருந்தாலும் வாழ முடியாது. அறிவு இல்லை என்றால் வாழ்ந்துவிடலாம். நான் படிக்கும்போது அரசு பள்ளிக்கூடங்களை நடத்தியது. தனியார் மதுக்கடைகளை நடத்தினர். ஆனால் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. அரசு மதுக்கடைகளை நடத்துகிறது. தனியார் பள்ளிக்கூடங்களை நடத்துகின்றனர்.

அரிமா சங்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டு கல்வியில் பெரிய சிக்கல் இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். ஜப்பான், சீனாவில் உயர்தொழில் நுட்பங்களை அவரவர் தாய்மொழிகளில் தான் படிக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு தங்கள் தாய்மொழி மீது நம்பிக்கை இருக்கிறது. மற்ற மொழிகளை விட உயர்ந்த மொழி என்று நம்புகின்றனர். ஆனால் நாம் பேசுவோமே தவிர நம்புவதில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X