For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எளிய தமிழில் வருமா, வருவாய்த் துறை ஆவணங்கள்?

By Staff
Google Oneindia Tamil News

Documents
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இருந்த வருவாய்த் துறை ஆவணங்கள் அத்தனையும், நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே இருக்கிறது இன்னமும்- புரியாத மொழி நடையில்.

தற்போது மாநிலம் முழுவதும் வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டாக்களில், இறுதியில் வட்டாட்சியர் கையெழுத்திடும் இடத்துக்கு மேலே உள்ள வரிகள்:

இதற்குச் சான்றாக சென்னை ராஜ்ய பாலருக்காகவும் அவருடைய சார்பிலும், சென்னை ராஜய்ய பாலரின் உத்தரவின் பேரிலும் கட்டளையின் பேரிலும் செயலாற்றுகிற... (பெயரும் உத்தியோகப் பெயரும்) என்னும் நான்... வருஷம்... மாதம்... தேதியுமாகிய இன்று இதில் இதனால் கையெழுத்து போடுகிறேன்'.

சென்னை ராஜ்யபாலர்- என்பது 1956-க்கு முன்னதாக சென்னை மாகாணமாக இருந்தபோது அப்போதைய ஆளுநரைக் குறிக்கும் பதவிப் பெயர். மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும்கூட இவ்வாறான சொற்கள் அரசு ஆவணங்களில் இடம்பெறுவது வெறும் மொழிக் குற்றம், பொருள் குற்றம் என்பதையும் தாண்டி- அவை செல்லுமா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்நிலையில், ஒரே வரியில் ஓரிடத்தில் ராஜ்யபாலர் என்றும், சில சொற்களைக் கடந்து அடுத்த இடத்தில் ராஜய்யபாலர் என்றும் இடம் பெறுவது அரசு ஆவணத்தின் உறுதித் தன்மையை பரிசோதிக்கச் செய்கிறது.

வீட்டுமனையின் வரைபடத்தை நக்ஷா (பிளான்) என்று குறிப்பிடுகின்றனர். நக்ஷா எந்த மொழியென்று தெரியவில்லை. இதே சொல் மற்றொரு இடத்தில் நஷா என்றும் குறிப்பிடப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் ஷெட்யூல் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. "பட்டியல்' என்ற எளிய- புரியும் தமிழ்ப் பெயர் புழக்கத்தில் இருக்கும்போது இன்னமும் ஷெட்யூல் தேவைதானா?

எல்லா இடங்களிலும் "ஜில்லா'தான் இன்னமும் கோலோச்சுகிறது. கையால் எழுதிக் கொடுப்பவர்கள்தான் "மாவட்டம்' என்கின்றனர்.

அதேபோல, வருவாய்க் கோட்டாட்சியர் என்ற பதவிப் பெயர், ரெவின்யூ டிவிஷனல் ஆபீஸர் என்றே (அதிலும் டிவிஷன்- சரியா? டிவிஷனல்- சரியா? தெரியவில்லை) குறிப்பிடப்படுகிறது.

மக்கள் பயன்படுத்தும் வழக்கு மொழிகளில் பிழையிருந்தால் அதைப் பொருள்படுத்தத் தேவையில்லை. ஆனால், காலம்தோறும் பயன்படுத்தப் போகிற, சொத்தின் உரிமையைப் பறைசாற்றுகிற அரசு ஆவணம் இப்படியிருக்கலாமா? என்பதுதான் கேள்வியே.

ஊர்ப் பெயரிலேயே சிக்கல்!

குறிப்பிட்ட சில ஊர்களின் பெயர்கள் அவை எங்கிருக்கின்றன? என்பது தெரியாத வகையில் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, திருச்சியிலுள்ள "உறையூர்' சங்க காலம் தொட்டே நன்கு அறியப்பட்ட ஊர். மாநிலம் முழுவதும் இப்போதும் தெரியப்படும் ஊர்.

ஆனால், வருவாய்த் துறை ஆவணங்கள் இந்த ஊரை தாமலவாரூபயம் கிராமம் என்கின்றன. எந்தக் காலகட்டத்தில் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது? மாற்றியது யார்? அப்படியானால் பொருள் என்ன? மூத்தவர்களுக்கும் தெரியவில்லை. அப்படியே சில காரணங்களுக்காக மாற்றப்பட்டிருந்தாலும் (!) இப்போதும்கூட தாமலவாரூபயம் தேவையா?

நில உரிமங்கள், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருவாய்ச் சான்று என எதற்காகச் சென்றாலும் இந்தப் பெயரைக் குறிப்பிட்டே அலுவலர்கள் கையெழுத்திடுகின்றனர்.

இதுபோன்ற ஏராளமான சிக்கல்கள் அரசு ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து தஞ்சாவூர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி முதல்வர் முனைவர் கு. திருமாறன் கூறியது:

பெரியார் காலத்திலேயே இதுபோன்ற சிக்கல் எழுந்தது. தமிழில் ஆட்சி அதிகாரச் சொற்களை மொழிபெயர்க்க அரசு உத்தரவிட்ட பிறகு வந்த புதிய சொற்கள், மிகவும் சிக்கலானவையாக இருந்தன.

இந்த எழவுக்கு இங்கிலிஷே இருந்து தொலையட்டுமே என்று கருத்துத் தெரிவித்தார் பெரியார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்து சொற்களாகவே இப்போதைய வருவாய்த் துறை ஆவணங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு முந்தைய முகலாயர் ஆட்சிக் காலத்தைய உருது சொற்களும் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

வருவாய்த் துறை ஆவணங்களில் உள்ள சொற்களை முழுவதுமாக ஆய்வு செய்து- பரிசீலனை செய்து எளிய தமிழில், புரியும் வகையிலான நடையுடன் இவற்றை மாற்றுவது அவசியம் என்றார் திருமாறன்.

இது வெறும் மொழி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. மாறாக, இந்த நடைமுறையே தொடர்ந்து, அடுத்த தலைமுறையினர் இவற்றைக் காணும்போது இடைப்பட்ட மொழி- நடை- வழக்குகளை அறிந்து கொள்ளாமலோ அல்லது தெரியாமலோ பயணிக்கும் வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நியாயமே.

தமிழ் செம்மொழியாகிய பிறகும் இப்பிரச்னை நீடிக்கக் கூடாது.

செய்வாரா முதல்வர்?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X