For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு சிறைச்சாலை கல்விச் சாலையாகிறது ...

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: பாளையங்கோட்டை சிறைச்சாலையில் 15 கைதிகள் பட்டதாரிகளாகி, விரைவில் பட்டம் பெறவிருக்கிறார்கள்.

மனிதன் தவறு செய்வது இயற்கை. அவன் திருந்தி வாழ்வதற்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் ஒரு கல்விக்கூடம் தான் சிறைகூடம். தவறு செய்யும் ஒருவன் சிறை வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டால் அவன் மறுபடியும் சமுதாயத்தில் தவறு செய்ய நினைக்க மாட்டான்.

ஒரு நொடிப் பொழுது சிந்திக்காமல் நாம் செய்யும் தவறுக்கு பரிகாரம்தான் சிறைதண்டனை. இதனால் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டும் என்பதை சிறைவாசம் கற்றுக்கொடுக்கிறது.

வெளி உலகில் வாழ்வதை போன்று சிறையிலும் வாழலாம். ஆனால் அங்கு கட்டுப்பாடுகள் உண்டு. கட்டுப்பாடுகள் இல்லாததால் தான் நாம் தவறுகள் செய்கிறோம். அந்த கட்டுப்பாடுகள் தான் சிறையில் மனித வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குகிறது.

இப்படி எத்தனையோ மனிதர்களுக்கு நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் சிறைச்சாலைகளில் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முக்கியத்துவம் வாய்ந்தது.

பாளை. மத்திய சிறை

இந்திய வரலாற்றில் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு என்று தனி இடம் உண்டு. பழமை மிக்க ஜெயில்களில் பாளையங்கோட்டை ஜெயிலும் ஒன்று. இந்த ஜெயில் 1880- ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட பல வீரர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். 1929-ம் ஆண்டு பாளை. ஜெயில் மாவட்ட ஜெயிலாக மாற்றம் செய்யப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாக அரசு மாற்றம் செய்தது.

பின்னர் 1-4-1968 ம் ஆண்டு மத்திய சிறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 74.95 ஏக்கர் பரப்பளவில் ஜெயில் அமைந்துள்ளது. இந்த சிறையில் அரசியல் தலைவர்களும், தியாகிகளும் இருந்ததால் மேலும் சிறப்பு அடைந்தது.

1,631 கைதிகள்

தற்போது இந்த ஜெயிலில் 1631 கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் 913 கைதிகள் ஆயுள் தண்டனை கைதிகள். சிறை வளாகத்துக்குள் ஒரு நூலகம் இருக்கிறது. அதில் ஆயிரத்து 500 புத்தகங்கள் இருக்கின்றன. சுழற்சி முறையில் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து 500 நூல்கள் கொண்டு வரப்படுகின்றன.

கைதிகளுக்கு திடீரென்று ஏற்படும் உடல்நலக்குறைவை பரிசோதனை செய்ய ஜெயில் வளாகத்தில் ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது. இதில் 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ், ஒரு பார்மசிஸ்ட், மற்றும் 2 உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கைதிகள் தினந்தோறும் காலை 6 மணிக்கு செல்லில் இருந்து திறந்துவிடப்படுவார்கள். மாலை 6.30 மணிக்கு மீண்டும் அடைக்கப்படுவார்கள்.

8 பிளாக்குகள்

பாளை. ஜெயிலில் 8 பிளாக்குகள் (பிரிவுகள்) இருக்கின்றன. ஒவ்வொரு பிளாக்குக்கும் 32 சிறைகள் உள்ளன. இது தவிர இணைப்பாக இரண்டு பிளாக்குகள் உள்ளன. அனைத்து சிறைகளுக்கும் மின்விசிறி வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏ கிளாஸ் கைதிகளுக்கு வாரத்தில் 3 நாள் மதியம் சிக்கன் உணவாக கொடுக்கப்படுகிறது.

மற்ற கைதிகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவில் 115 கிராம் சிக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. சிக்கன் சாப்பிடாத கைதிகளுக்கு வாழைப்பழம், கேசரி, உருளைகிழங்கு ஆகியவை உணவாக கொடுக்கப்படுகின்றது. நீரிழிவு நோய் கைதிகளுக்கு கட்டுப்பாடான உணவு வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பும் பட்டமளிப்பும்

இங்குள்ள கைதிகள் படிப்பதற்கு சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆயுள் தண்டனை பெற்ற 15 கைதிகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் "எம்.ஏ." பட்டப்படிப்பு முடித்துவிட்டு, எம்.பில். பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எம்.ஏ. பட்டம் முடித்த கைதிகளுக்கு வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஜெயில் வளாகத்தில் பட்டம் வழங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.டி.சபாபதிமோகன் கலந்துகொண்டு, கைதிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.

விழாவில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணப்பன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, பல்கலைக்கழக பதிவாளர் செல்லத்துரை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கண்ணன், தொலை தூர கல்வி இயக்குனர் பால்ராஜ் ஜோசப் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஜெயில் சூப்பிரண்டு இரா.அறிவுடைநம்பி செய்து வருகிறார்.

முதுகலை பட்டம் பெறும் கைதிகள் விவரம்:

1. சுப்பிரமணியன் (வயது 67), தந்தை பெயர் ராமசாமி, 2. சிதம்பரம் (44), தந்தை பெயர் முத்துசாமி, 3. பெருமாள்(45), தந்தை பெயர் கந்தையா, 4. சிவா என்ற சிவக்குமார்(34), தந்தை பெயர் மாடசாமி, 5. அணில்குமார்(30), தந்தை பெயர் மாடசாமி, 6. ஜார்ஜ்கென்னடி(45), தந்தை பெயர் குருசுமுத்து, 7. ஜான்குமார்(31), தந்தை தாமஸ், 8. மில்லத் இஸ்மாயில்(37), தந்தை பெயர் சிந்தாமதார்,

9.மோசஸ் அருளானந்தம்(44), தந்தை பெயர் ஜேசுதாசன், 10. கே.ராமசாமி(42), தந்தை பெயர் கலங்கரையான், 11. சரவணன்(35), தந்தை பெயர் குமரந்தையாபிள்ளை, 12.சீனிவாசன்(29), தந்தை பெயர் சுப்பையா, 13.செல்வம்(36), தந்தைபெயர் ராஜ், 14. தாணுலிங்கம்(43), தந்தைபெயர் ராமகிருஷ்ணன், 15. வால்மீகி(43), தந்தை பெயர் தில்லை பொன்னம்பலம்.

இதில் மில்லத் இஸ்மாயில், பெருமாள் ஆகியோர் பரோலில் இருக்கிறார்கள். செல்வம் என்பவர் கோவை ஜெயிலிலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். மற்றவர்கள் பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அரசு தத்தெடுத்தது...

எம்.ஏ. பட்டம் முடித்த மில்லத் இஸ்மாயில் கூறியதாவது:

குடும்பத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக 2.1.1991 ம் ஆண்டு தவறு நடந்தது. இதனால் நான் குற்றவாளியானேன். 14.12.93 ல் நெல்லை முதன்மை கோர்ட்டு எனக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்தேன். 14.10.96 ம் ஆண்டு ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்தேன். அதன்பிறகு நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவராக 1998 முதல் 2001 வரை பொறுப்பு வகித்தேன். 27.8.2001 அன்று எனக்கு ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

இதையடுத்து அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன். ஜெயிலுக்கு நான் சென்றபோது கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் ஒரு உணர்வு இருந்தது. தனிமை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

ஜெயிலில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எம்.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்தேன். ஜெயில் வளாகத்துக்குள் வகுப்புகள் நடத்தப்பட்டன. இங்கேயே தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.

தற்போது எம்.பில். படித்துக்கொண்டு இருக்கிறேன். இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். செய்த தவறை உணர்ந்துவிட்டேன். எங்களை போன்றவர்களுக்கு இந்த பட்டப்படிப்பு புதிய அத்தியாயம் தொடங்குவதாகவே கருதுகிறோம்.

நான் படித்து முடித்து வெளியே வந்தால் கூட எனக்கு வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே அரசு எங்களை போன்றவர்களை தத்தெடுத்து வேலை கொடுக்க வேண்டும், என்றார்.

பட்டதாரி கைதி பெருமாள் கூறியதாவது:

1986-ம் ஆண்டு எனது உறவினரைக் கொலை செய்தேன். இந்த வழக்கு நெல்லை மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. 1990ம் ஆண்டு எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் முதலில் ஜெயிலுக்கு வந்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கார் சத்தம் மட்டும் தான் எனது காதில் விழுந்தது. தனி அறையில் தத்தளித்தேன். அதனால் எனது மனதை மாற்று வழியில் கொண்டு செல்வதற்காக எம்.ஏ. படிக்கத் தொடங்கினேன்.

இப்பொழுது எம்.ஏ. முடித்துவிட்டு எம்.பில். படித்துக் கொண்டு இருக்கிறேன். எங்களைப்போன்ற மனம் திருந்திய கைதிகளை கருணை அடிப்படையில் வெளியே விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

துணை வேந்தர் பேட்டி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மூலம் கைதிகளுக்கு பட்டப்படிப்புக்கான பாடம் நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பு அனைவருக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

வருகிற கல்வியாண்டு முதல் காந்திய சிந்தனை என்ற டிப்ளமோ படிப்பு தொடங்கப்படுகிறது. கைதிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அறிவு என்ற ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக ஜெயிலில் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இந்திய வரலாற்றிலேயே பாளையங்கோட்டை சிறையிலேதான் முதன்முதலாக பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை சிறைவாசிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X