For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்பன் கழக 34-வது ஆண்டு விழா: ஜெயகாந்தனுக்கு ரொக்கப் பரிசு!!

By Staff
Google Oneindia Tamil News

R.M. Veerappan
சென்னை: சென்னை கம்பன் கழகத்தின் 34-வது ஆண்டுவிழா 8ம் தேதி வெள்ளிக்கிழை தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த விழாவில் இலக்கியவாதிகளுக்கும், மாணவர்களுக்கும் சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக சென்னை கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ் இலக்கியத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்க்கும் நோக்கில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் 34-வது ஆண்டு விழா சென்னையில் 8-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் கம்பர் விருது (பரிசு ரூ. 25,000) சோ.சத்தியசீலனுக்கும், பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவு பரிசு (ரூ.20,000) எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், மு.மு.இஸ்மாயில் நினைவுப்பரிசு (ரூ.10,000) கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்படுகிறது.

கி.வா.ஜ. நினைவுப் பரிசை பேராசிரியர் அப்துல் சலாமும், கம்பன் அடிப்பொடி நினைவுப் பரிசை எழுத்தாளர் எதிரொளி விஸ்வநாதனும், மர்ரே எஸ்.ராஜம் நினைவுப் பரிசை பதிப்பாளர் கோ.இளவழகனும், கோதண்டராமன் நினைவுப் பரிசை ஞானசந்தரத்தரசும், சீறாப்புராணம் பரிசை ஜே.எம்.சாலியும் பெறுகிறார்கள். இவர்களுக்கு தலா ரூ.2,500 பரிசு வழங்கப்படும்.

மகளிர் முற்றம்

8-ந் தேதி மகளிர் முற்றம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இளம்பிறை மணிமாறன் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க பெண்களே கலந்துகொள்ளும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.

தேவிலட்சுமி, உமா மகேஸ்வரி, டாக்டர் சுதா சேஷையன், சேலம் ருக்மணி ஆகியோர் பேசுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து கவிஞர் அப்துல் காதர் தலைமையில் கவிதை முற்றம் என்ற கவிதை நிகழ்ச்சியும், சோ.சத்தியசீலன் தலைமையில் மாணவர் முற்றம் என்ற நிகழ்ச்சியும், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தலைமையில் மாண்பறி முற்றம் நிகழ்ச்சியும், எழுத்தாளர் இலங்கை ஜெயராஜ் பங்கேற்கும் தனியுரையும் நடைபெறுகிறது.

பாப்பையா பட்டிமன்றம்

விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி சுகி.சிவம் தலைமையில் வழக்காடு மன்றமும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது. கம்பன் விழாவையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவில் பரிசு (ரூ.28,000) வழங்கப்படும், என்றார் ஆர்எம்வீ.

பேட்டியின்போது கம்பன் கழகத் துணைத் தலைவர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், ஏவி.எம்.சரவணன், செயலாளர் இலக்கிய வீதி இனியவன் ஆகியோர் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X