For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நூலகங்கள் செயல்பாடு-முதல்வர் வருத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நூலங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.120 கோடியில் உலக தரத்தில் அமைக்கப்பட உள்ள அரசு நூலக வளாகத்துக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

கோட்டூர்புரத்தில் பெருமை மிக்க இந்த நூலகத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கான பணிகளை விரைவில் முடித்து திறப்பு விழாவுக்கு என்னை அழையுங்கள். தமிழகத்தில் 3,924 நூலகங்கள் உள்ளன. பொது நூலகங்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகள் போற்றக் கூடியதாக இல்லை.

எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது.

நான் எதை எதிர்பார்த்து தங்கம் தென்னரசுவை அமைச்சராக நியமித்தேனோ அது நிறைவேறியுள்ளது. அந்த இளைஞர் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி, அவரது தந்தை தங்க பாண்டியனின் பெருமையை காப்பாற்றிவிட்டார். அவரை அமைச்சராக்கியதில் நான் ஏமாறவில்லை. நான் ஏமாறவும் மாட்டேன். யாரும் என்னை ஏமாற்றவும் முடியாது.

யார், யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும், யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்து நாங்கள் செயல்படுகிறோம்.

கோட்டூர்புரம் எனது வாழ்க்கையின் முழுமையான அத்தியாயம். ஒரு பொதுத் தேர்தல் நேரத்தின்போது இப்பகுதியில் சிலர் என்னையும், உடன் வந்தவர்களையும் ஒரு மண்டபத்தில் சிறை வைத்து தாக்கினர்.

அவர்களிடம் இருந்து என்னை ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த சாரங்கன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காப்பாற்றினர். அவர்களை பாராட்டி அவர்களுக்கு வேஷ்டி, சேலைகளை பரிசாக அண்ணா வழங்கினார்.

அவர்கள் என்னைக் காப்பாற்றாவிட்டால், என்னை முதல்வராக நீங்கள் பார்த்திருக்க முடியாது. எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

வீட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் அது, எந்த இடத்தில் வாங்கப்பட்டது என்பது குறித்து அதன் சரித்திரத்தைக் கூறுவார்கள். நூலகம் நமது அடிப்படைத் தேவை. வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் அண்ணா. அவரது ஆவல் இன்னமும் நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றும் வகையில் நாம் நடைபோடுவோம். எனவே, இந் நூலகம் சிறப்பாக அமைக்கப்படும்.

வருங்காலத்தில் இந்த நூலகத்தை பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தினால், இந்த விழா வெற்றி பெற்றதாக அமையும். கோட்டூர்புரத்தில் நூலகம் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை நான் பெற்றதற்கு எனது மகள் கனிமொழியே காரணம் என்று குறிப்பிட்டனர். கனிமொழியின் ஆர்வத்தை செயல்படுத்தி இருக்கிறோம் என்று அவர் பேசினார்.

புத்தக 'திருடர்' துரைமுருகன்:

முதல்வர் தனது பேச்சின்போது துரைமுருகனின் புத்தக ஆவல் குறித்து பேசியதாவது: புத்தகம் படிப்பதில் அமைச்சர் துரைமுருகன் மிகுந்த ஆர்வமுடையவர். எனது வீட்டுக்கு வந்தால் எனக்கு தெரியாமல் புத்தகத்தை எடுத்துச் சென்று விடுவார். ஆனால் இது அரசு நூலகம். அப்படி எடுத்து செல்ல மாட்டார் என்று நினைக்கிறேன் என்றார்.

அப்போது துரைமுருகன் உள்பட அனைவரும் சிரித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X