For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வல்லம் தந்த கணித முத்து!

By Staff
Google Oneindia Tamil News

Sivasankara Narayana Pillai
-இசக்கிராஜன்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள குக்கிராமம் வல்லம். இக்கிராமத்தில் தான், உலகமே இன்று குழப்பம் இன்றி கணிதத்தில் சாதிக்கும் கொண்டிருக்கும் சூத்திரத்தினை கண்டுபிடித்த எஸ்.எஸ் பிள்ளை என்ற சிவசங்கரபிள்ளை பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இந்த மாமேதையால்தான் இந்தியா உலக அரங்கில் புகழ் பெற்றது.

திருவாங்கூர் சமஸ்தனத்தில் திவானாக இருந்த சிபி ராமசாமி ஐயருக்கு டாக்டர் சிவசங்கர நாராயணபிள்ளையை (டாக்டர் எஸ்எஸ் பிள்ளை) தன்னுடைய திருவாங்கூர் சர்வகாலசாலைக்கு ஆசிரியராக கொண்டு வர வேண்டும் என்று தீராத ஆசை.

டாக்டர் எஸ்எஸ் பிள்ளை கணித ஆராய்ச்சியில் மேதை மட்டுமல்ல. அசகாய சூரர். ஸ்ரீநிவாச ராமானுஜத்துக்கு பிறகு எண் கணிதத்தில் புகழ் பெற்று விளங்கியவர். முந்நூறு வருஷங்களாக தீர்க்க முடியாமல் இருந்த கணித மேதைகளையெல்லாம் திக்குமுக்காட செய்த வாரிங்ஸ் அனுமானம் என்ற புதிரை விடுவித்ததோடு அதற்கு விடையும் கண்டவர்.

இவ்வளவு திறமை வாய்ந்த இளம்மேதையை எப்படியும் தன்னுடைய சர்வகாலசாலைக்கு கொத்திக் கொண்டு வந்து விடவேண்டும் என சர். சிபி ராமசாமி ஆசைப்பட்டு தீவிரமாக முயற்சி செய்தார்.

ஆனால் டாக்டர் எஸ்எஸ் பிள்ளையின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது. தன்னுடைய எண் கணித ஆராய்ச்சிக்கு அண்ணாமலையின் அமைதியான ஆக்ஸ்போர்டு சூழ்நிலை அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. வாரிங்ஸ் அனுமானத்திற்கு விடை கண்டு, அதன் மூலம் உலக புகழ் பெற்றதெல்லாம் இந்த சூழ்நிலையின்தான்.

படிப்பதற்கு புத்தகங்களும், பழகுவதற்கு அறிஞர்களும் அங்கு அதிகமாக இருப்பதால் அவருக்கு அண்ணாமலையை விட்டு வர மனமில்லை. எஸ்எஸ் பிள்ளையின் குடும்பமோ நடுத்தரத்திற்கும் சற்று குறைவான குடும்பம். அதே நேரத்தில் அவர் சங்கோஜப் பிறவியும் கூட. கடின உழைப்பும், எண் கணிதமுமே அவர் கண்ட உலகம். இவரை ஒரு கட்டுபாட்டிக்குள் வைத்திருப்பது புயலை பெட்டிக்குள் வைத்திருப்பது போல.

ஒரு சமஸ்தானத்து திவானே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கும்போது வருவதற்கு என்ன. படிச்சிருந்து என்ன செய்ய, என்று அவருக்கு வேண்டியவர்கள் எல்லாம் மிகவும் சங்கப்பட்டார்கள். பிறகு எப்படியோ செங்கோட்டையில் உள்ள பெரிய மனிதர்களும், உறவினர்களும் ஒன்று சேர்ந்து அண்ணாமலைக்கு வந்து ஒரு முற்றுகை போராட்டமே நடத்தி பிள்ளையை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

ஒரு வழியாக 1940-41-ல் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை திருவனந்தபுரம் வந்து வேலையில் சேர்ந்தார். டாக்டர் பிள்ளையின் வாழ்க்கை தொடங்கிற்று. இவர் வேலைக்கு சேர்ந்த மறுவருஷம், வடநாட்டில் நடந்த சயின்ஸ் காங்கிரஸூக்கு இவரை விட்டு விட்டு இன்னொருவரை திருவாங்கூர் சர்க்கார் தேர்ந்தெடுத்து விட்டது.

சர்.சி.பி வெளிநாடு போயிருந்தபோது இது நடந்தது. அவ்வளவுதான், டாக்டர் பிள்ளை உடனே வேலையை ராஜினமா செய்துவிட்டு திவானுக்கு ஒரு காகிதத்தை மாத்திரம் எழுதி தபாலில் போட்டு விட்டு செங்கோட்டை ரயில் ஏறி விட்டார்.

இதை அறிந்த டாக்டர் பிள்ளையின் நண்பரும், ஜெர்மனிய நாட்டு கணித மேதையுமான டாக்டர் எப்.டபிள்யு லெவின் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்கத்தா சர்வகாலசாலைக்கு அவரை அழைத்துக் கொண்டார்.

அப்போதைய துணை வேந்தர் சியாம பிரசாத் முகர்ஜியும் டாக்டர் பிள்ளைக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்தார். சர்வதேச கணித அமைப்புகள் இவருடைய ஆராய்ச்சியை போற்றிப் புகழ்ந்தன.

கணித உலகெங்கும் இவருடைய பெயர் பிரபலமடைந்தது. டாக்டர் எஸ்எஸ்பிள்ளையின் எண் கணித கோட்பாடு (Dr. S.S. Pillai's Theory of Number) என்றே ஒரு சூத்திரமும் கணிதயியலில் நிரந்தரம் ஆகிவிட்டது.

ராமானுஜத்தை பற்றி ஹார்டி எழுதிய 12 வால்யூம் உள்ள புத்தகத்தில், ஒரு வால்யூம் இவரை பற்றி எழுதினார். இப்படி புகழின் உச்சியில் டாக்டர் எஸ்எஸ்பிள்ளை இருக்கும்போது சான்பிரான்சிகோ கணித மாநாட்டில் தலைமை தாங்க அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று டாக்டர் பிள்ளை விமானத்தில் அமெரிக்கா செல்லும் போது, விதி விளையாடி விட்டது.

1950 ஆகஸ்ட் 31-ம் தேதி கெய்ரோவிலிருந்து கிளம்பி எகிப்து பாலைவனத்தின் மேல் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானது. அந்த விமானத்தில் பயணம் செய்த புகழ் பெற்ற ஒரு கணித மேதையின் வாழ்வு முடிந்துவிட்டது.

டாக்டர் பிள்ளையை நினைக்கும் போதெல்லாம் நேச்சர் என்ற உலகப் புகழ் பெற்ற இதழில் டாக்டர் இ.டி பெல் என்ற மேல்நாட்டு மேதை எழுதிய உலகப் புகழ் பெற்ற சாதனைகளை செய்தவர் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் பிறந்த செங்கோட்டையில் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை தெரு என்ற பெயர் பலகையை பார்க்கும் போதெல்லாம் அந்த அறிஞரின் சாதனை நமக்கு பெருமை சேர்க்கின்றன.

இப்போது கணித மேதை எஸ்எஸ் பிள்ளை பிறந்த குக்கிராமமான செங்கோட்டை தாலுகா வல்லத்தில் இவர் வாழ்ந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து போய், தற்போது யாரோ சிலரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளது.

கணித மேதை எஸ்எஸ் பிள்ளை வீரவாஞ்சிநாதனோடு கை கோர்த்து கலெக்டர் ஆஷ்துரையை சுட்டு கொலை செய்ய திட்டம் தீட்டிய சாவடி அருணாச்சலம் பிள்ளையின் உறவினர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X