For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்-பாகம் 2

By Staff
Google Oneindia Tamil News

Caldwell
-முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

தொடர்ச்சி...

இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவு பெற்றவராக மாற்றினார். 1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 உருபா அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் 'தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார். மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார். மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.

"திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே..." இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Dr. Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதே யெனினும் பொருந்தும் "(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் ...." தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.(தமிழ்வரலாறு, ப.33) எனவும் 'கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 48) எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.

கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளை யெல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது. அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் 'வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் 'லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.

கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார்.

கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84). கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக (யஷ்விஜுலிஸ்ரீ) கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.

கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெருநாடும், அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்து கொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்." இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

உதவிய நூல்கள் :
1. இரா.பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்
2. கா. மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி
3. வாழ்வியற் களஞ்சியம், தமிழ்ப்பல்கலைக்கழகம்
4. கால்டுவெல் நூல்கள்
5. பாவாணர் நூல்கள்

மின்னஞ்சல்: [email protected]
இணையம்: www.muelangovan.blogspot.com

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்- பாகம் 1

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X