For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனிமொழி Vs சரத்குமார்: பாரதியை பழி சுமத்துவதா?

By Staff
Google Oneindia Tamil News

Kanimozhi
சென்னை: மகாகவி பாரதியாரை பழி சுமத்தும் வகையில் கவிஞர் கனிமொழி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர் கனிமொழி. "தமிழ் மெல்லச் சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல். தமிழ் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பாரதியின் பாடலை பழுதுற படித்துவிட்டு, அந்த பழுத்த கவிஞன் மீது பழி சுமத்தி இருக்கும் செயல் கண்டு நடுக்கமுற்றேன். தமிழால் பாரதி தகுதி பெற்றதும், தமிழ் பாரதியால் தகுதி பெற்றது என தமிழ் கூறும் நல்லுலகம் ஏகோபித்த குரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்துவதாகும்.

பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில், தாயுமாணவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான்.

அப்பாடல் வரிகள் இதோ...

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்
புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை
சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத்தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்ஆ
இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''
இது தான் அந்தப்பாடல்

இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த் தாய் தமிழ் மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவி மீது பாய்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்'
என்றவன் பாடலை பிழையுற உணர்ந்து கொண்டு, ஒரு பெருங்கவி மீது கரும்பழி சுமத்தியிருப்பது கவலைக்குறியது.

அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X