For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விளையாட்டு- 2008

By Staff
Google Oneindia Tamil News

Abinav Bindra
மற்ற நாடுகளுக்கு எப்படியோ, இந்திய விளையாட்டுத் துறைக்கு 2008ம் ஆண்டு அமோகமான ஆண்டு.

வாராது வந்த மாமணியாக ஒலிம்பிக்கில் நமக்கு தங்கப் பதக்க கிடைத்த ஆண்டாச்சே, சும்மாவா!

ஒலிம்பிக்கில் இந்தியா அசத்திய ஆண்டு, ஐபிஎல் டுவென்டி20 போட்டி மூலம் கிரிக்கெட் உலகை இந்தியா பிரமிக்க வைத்த ஆண்டு, பேட்மிண்டனில் சாய்னா நேஹ்வால் உலக அரங்கில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய ஆண்டு, கும்ப்ளே, கங்குலி ஆகிய ஜாம்பவான்ள் ஓய்வு பெற்ற ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் 12 ஆயிரம் ரன்களைத் தொட்ட ஆண்டு என 2008ம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு பெருமிதம் தந்த ஆண்டு.

ஒலிம்பிக்கில் முத்திரை ..

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கம் வென்று இந்தியாவின் நூற்றாண்டு கால கனவை நனவாக்கினார்.

மேலும் மல்யுத்தத்தில் சுஷில்குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர் குமார் ஆகியோர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்திராத கெளரவ சாதனை இது என்பதால் ஒட்டு மொத்த இந்தியாவும் குதூகளித்து சந்தோஷப்பட்டது.

சாய்னாவின் ரேங்க் சாதனை ...

இந்திய பேட்மிண்டன் துறைக்கும் 2008ம் ஆண்டு மிகப் பெரிய ஆண்டாக அமைந்தது. ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால், காலிறுதி வரை தகுதி பெற்று இந்தியாவுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

பதக்க வாய்ப்பு நழுவினாலும் கூட சாய்னாவின் திறமையான ஆட்டம் அத்தனை இந்தியர்களையும் கவர்ந்து விட்டது.

ஒலி்ம்பிக்கி்ல் பதக்கம் போனாலும் கூட, சைனீஸ் தைபே கிரான்ட்பிரி, ஜூனியர் காமன்வெல்த், உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா.

இதற்கெல்லாம் உச்சமாக, உலக தரவரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து புதிய வரலாறும் படைத்தார். இந்திய வீராங்கனை ஒருவர் தர வரிசைப் பட்டியலில் இந்த அளவுக்கு உயர்வு பெற்றது இதுவே முதல் முறையாகும்.

சாய்னாவின் தொடர் சாதனைகளால் சிறந்த வளரும் வீராங்கனையாக உலக பேட்மிண்டன் சம்மேளனம், சாய்னாவை தேர்வு செய்தது.

ஐபிஎல் திருவிழா ..

கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், உலக விளையாட்டு அரங்கிலும் பெரும் சலசலப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடர்.

கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து வீரர்களை ஏலம் எடுத்த 8 இந்திய அணிகள், இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றன.

அதிகபட்சமாக இந்திய கேப்டன் டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுத்தது. உலக அளவில் ஜாம்பவான் வீரர்கள் பல்வேறு அணிகளில் இடம் பெற்றனர்.

இறுதிப் போட்டியில் சென்னை அணியும், ஷான் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் வார்னே அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

உலகிலேயே மிகப் பணக்கார அமைப்பு என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய இந்தப் போட்டித் தொடரின் ஆடம்பரம், பிரமாண்டம் நிரூபித்தது.

சச்சின் 12,000 ...

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 2008ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. காரணம், இந்த ஆண்டில்தான் அவர் லாராவின் உலக சாதனையை ஒரு வழியாக முறியடித்தார்.

அக்டோபர் 17ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது லாரா வைத்திருந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் சாதனையை (11,953) கடந்தார் சச்சின்.

12 ஆயிரம் ரன்களைத் தற்போது தாண்டி தொடர்ந்து சாதனை தாகத்துடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார் சச்சின்.

உலக அளவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சச்சின் குவித்து வைத்துள்ள சாதனை ரன்களை தாண்ட மற்ற வீரர்களுக்கு ரொம்ப காலமாகும்.

ஜாம்பவான்களுக்கு டாடா ...

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளேவும், செளரவ் கங்குலியும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.

இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக அளவிலான விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே. 619 விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே.

நவம்பர் மாதம் நடந்த இந்திய - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றுக் கொண்டார் கும்ப்ளே.

அருமையான கிரிக்கெட் வீரர், நிஜமான ஜென்டில்மேன் என சக கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டவர் கும்ப்ளே. அவரது நிழலுக்கு அருகில் கூட இன்னொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் யாரும் இல்லை.

கும்ப்ளேவைப் போலவே பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கங்குலியும் இதே ஆண்டில்தான் ஓய்வு பெற்றார்.

தனது கடைசிக்கால கிரிக்கெட்டின்போது பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்தபோது நிஜமாகவே இந்திய அணியைப் பார்த்த மற்ற அணிகள் மிரண்டது நிஜம்.

டோணிக்கு முன்பே உலக கிரிக்கெட் அணிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கங்குலி. 12 ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடிய கங்குலி, நவம்பர் 10ம் தேதி நடந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

சரிந்த சானியா ..

இந்திய டென்னிஸின் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கு இந்த ஆண்டு நிச்சயம் நல்ல ஆண்டு இல்லை.

தொடர் காயத்தால் 31வது இடத்திலிருந்து 100வது ரேங்குக்கு இறங்கிப் போய் விட்டார் சானியா.

வருடத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் 3வது சுற்று வரை முன்னேறியதே அவர் செய்த ஒரே சாதனை. அதன் பின்னர் தொடர்ந்து அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

இப்படி காயத்தால் தேக்க நிலையைக் கண்ட சானியா 2009ம் ஆண்டில்தான் தனது வெற்றிக் கணக்கை துவக்குவார் எனத் தெரிகிறது.

அடித்த சிங் .. அழுத சாந்த் ...

டிரவுசர் போட்ட நர்சரி பள்ளிச் சிறார்கள் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹர்பஜன் சிங் அடிக்க, ஸ்ரீசாந்த் தேம்பித் தேம்பி அழுததை டிவியில் பார்த்தபோது இந்தியாவே 'கலங்கித்தான்' போனது.

ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணிக்காக ஆடினார் ஹர்பஜன் சிங். பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த்.

லீக் போட்டியின்போது மும்பை அணியை பஞ்சாப் தோற்கடித்தது. அப்போது அணிக்குத் தலைமை தாங்கிய ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஜாலியாக வார, கடுப்பான சிங், சாந்த்துக்கு விட்டார் ஒரு பளார் அறை.

இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த், மைதானத்தில் நின்றபிட தேம்பித் தேம்பி அழ ஒட்டு மொத்த ஸ்டேடியமும் உச் கொட்டியது.

சக வீரர்கள் தேற்றிப் பார்த்தும், அடக்க முடியாமல் ஸ்ரீசாந்த் அழுததுதான், விளையாட்டு உலகில் இந்த ஆண்டின் உருக்கமான சம்பவம் எனலாம்.

ஆனால் அதன் பின்னர் அவர் அண்ணன், நான் தம்பி, அவர் அடிக்கலாம் என்ற ரேஞ்சுக்கு ஸ்ரீசாந்த் பேசி சமாதானமாகிக் கொண்டார்.

'குப்புறடித்த' ஹாக்கி ...

இந்திய ஹாக்கி அணிக்கு 2008ம் ஆண்டு ஏழரை சனிக் காலம்.

இதுவரை இல்லாத பெரும் கேவலமாக, ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியது இந்திய ஹாக்கி அணி.

ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கம் வென்ற பெருமைக்குரியது நமது ஹாக்கி அணி. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற தவறியபோது அதைக் கண்டு வேதனைப்பட்டனர் இந்திய ஹாக்கி ரசிகர்கள்.

இதை விட மோசமான சம்பவம் ஒன்றையும் இந்திய ஹாக்கி சம்மேளனம் சந்தித்தது.

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான அணியில் இடம் பெறுவற்காக இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரனிடம், டெல்லி வீரர் ஒருவர் லஞ்சம் கொடுத்தது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜோதிகுமரன் ராஜினாமா செய்தார். இந்திய ஹாக்கி சம்மேளனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் கலைத்து விட்டது.

இதற்கு மேல் இந்திய ஹாக்கி அணியின் 2008ம் ஆண்டு செயல்பாடு குறித்து விசேஷமாக கூற எதுவும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X