For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமா ஒப்பாகுமா: கருணாநிதிக்கு வாலி புகழாரம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய். அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா. சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா? என்று முதல்வர் கருணாநிதிக்கு கவிஞர் வாலி புகழாரம் சூட்டினார்.

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழர் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சங்கத் தமிழ் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழை செம்மொழியாகவும், தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் அறிவித்த முதல்வரை பாராட்டி கவிதை முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கவிஞர் வாலி தலைமை தாங்கினார். புலவர் புலமைபித்தன், கவிஞர்கள் பழனி பாரதி, பா.விஜய், தமிழச்சி தங்கபாண்டியன், இளந்தேவன், கபிலன், விவேகா, நெல்லை ஜெயந்தா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தார்கள்.

காலை 11 மணிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, இரண்டரை மணி நேரம் நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார்.

மத்திய அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோ.சி.மணி, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் இதை கண்டு களித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத் தமிழ் பேரவை தலைவர் துரைமுருகன், செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் செய்திருந்தனர்.

கவிஞர் வாலியின் கவிதை ..

தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.
வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.

எவரேனும் என்னுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக. தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை, கண்டதும் தூக்குவேன் என் இருகை.

உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.

என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.
உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.

அருமை தலைவா,
ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
தேர்தலுக்கு தேர்தல் 5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.

தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம் செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும் புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி.
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை கொண்டாடுகிறது இந்த பூமி.

அய்யா,
50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.
குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை. இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.

சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.

உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.
கலைஞர்கோனே,
கருப்பு கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே.
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்.

நிஜம் சொன்னால், ரஜினியை விட நீயொரு வசீகரமான 'பிகர்'.
நாவினிக்க நாவினிக்க உன்னை பாடியே என் உடம்பில் ஏறிபோனது சுகர்.
நீ எங்கள் கிழக்கு, உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு.
நம்மொழி செம்மொழி, அதனை அங்கீகரிக்காது நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய் உடனே குனிந்தது அதன் சிரசு.
அதுபோல் தமிழனின் அடையாளங்களை வட்டியும், முதலும் சேர்த்து வள்ளலே நீதான் மீட்டாய்.

தரை மீனை திரும்ப தண்ணீரில் போட்டாய்.
அதனால் தான் அய்யா உன்னை அவருக்கு நிகர் அவர், தமிழனை துன்பம் தீண்டாது மீட்கும் தடுப்பு சுவர்.
மையம் ஏற்கும் வண்ணம் உன்னிடம் உள்ளது பவர்.
அத்தகு பவர் உன்போல் படைத்தவர் எவர்.

அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால், வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும், நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.

குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள் ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது, அடுப்பு விளக்கு, அன்பு விளக்கு, அமைதி விளக்கு, அறிவு விளக்கு என பல்விளக்கை இன்று, உன்னை பணித்து வாழ்த்தி சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா, உனக்கு தருவேன் கேள் ஒரு வெண்பா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X