For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'உங்களை வெறுப்பவர்களுக்கும், நீங்கள் நன்மையே செய்யுங்கள்'!

By Staff
Google Oneindia Tamil News

Jesus
சென்னை: ஈஸ்டர் தினத்தையொட்டி கிருஸ்துவ மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

உலகெங்கும் வாழும் கிருத்துவ சமுதாய மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் திருநாளை மிகுந்த எழுச்சியோடு கொண்டாடுகிறார்கள். ஏசு பெருமான் அன்பை, இரக்க உணர்வை மனிதர்களிடையே விதைத்து வளர்த்திடப் பாடுபட்டவர்.

''தாம் பிறரிடம் எதிர்பார்ப்பதையே தானும் பிறருக்கு செய்ய வேண்டும்'' என்னும் வாழ்வியல் நடைமுறை விதி ஏசுபெருமான் போதித்த முதன்மையான நீதிகளில் ஒன்றாகும்.

இத்தகைய பல நீதிகளில் சிறப்பிற்குரிய நீதியாக, ''அருகில் உள்ளவர்களை நேசிக்க வேண்டும் என்றும், பகைவர்களை வெறுக்க வேண்டும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்கு கூறுகின்றேன்; உங்கள் பகைவரை நேசியுங்கள்; உங்களை சபிப்பவர்களுக்கு நீங்கள் ஆசி கூறுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் நன்மையே செய்யுங்கள்; உங்களை அவமதித்து, அடக்கிக் கொடுமைப்படுத்துபவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்''- என்றும் போதித்தார்.

போதித்தது மட்டுமல்லாமல், போதித்தபடியே வாழ்ந்து காட்டினார். தம்மீது சினம் கொண்டு வெறுத்தவர்கள்; தாக்கியவர்கள்; சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்தியவர்கள் அனைவரையும் அவர் மன்னித்தார். அவர்களுக்காக இரங்கி, வருந்தி மனித நேயத்தின் சின்னமாக திகழ்ந்தார்.

ஏசுநாதரின் இத்தகைய மிகச்சிறந்த மனித நேயம் காரணமாகத்தான் கிருத்துவ சமயம் 2,000 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று தொண்டு சமயமாக உலகெங்கும் புகழ் பரப்பி நிற்கிறது. அதனால்தான், மனித அன்பு, மானிட வாழ்க்கை நெறி ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்த பெருமகன் ஏசுவை போற்றி வணங்கிடும் திருநாளாக இந்த ஈஸ்டர் திருநாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளில் தமிழகத்தில் வாழும் கிருத்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி மகிழ்ச்சி நிறைந்திட எனது உள்ளார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா...

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அன்பின் வடிவமாம் ஏசு பெருமான், சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் பண்டிகை என்னும் பெயரால் உலகு எங்கும் கொண்டாடப்படும் இந்த வேளையில், கிறிஸ்தவ பெரு மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில், அன்பு உயிர்த்தெழட்டும், உயிர் இரக்கம் உயிர்த்தெழட்டும், அமைதி தவிழட்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படட்டும், அகிலம் முழுவதும் ஆனந்தம் தாண்டவமாடட்டும் என பிரார்த்திப்போம்.

எனது அன்புக்குரிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்...

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்திச் செய்தியில்,

மனித குலத்தை ரட்சிக்க வந்தவர் என்று அருளப்பட்ட வாக்கின்படி வாழ்ந்து காட்டியவர் ஏசு கிறிஸ்து. பிறர் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பதை போதித்தவர்- அதன்படி வாழ்ந்து காட்டியவர். சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்க இருந்த கடைசி நேரத்திலும் தன்னை நிந்தித்தவர்களை மன்னித்து அவர்களுக்காக மன்றாடியவர்.

அவரது உயிர்த்தெழுந்த பண்டிகையை கொண்டாடி மகிழும் இந்த நன்னாளில் அவரது வழியில் மற்றவர்களது குற்றங்களை மன்னித்து மறந்து வாழ்ந்து காட்டுவோம் என கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அவர்களோடு அனைவரும் சூளுரை எடுத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

வைகோ...

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

மனிதகுல ரட்சகர் ஏசுகிறிஸ்து, கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, புனித வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதமான நாள்தான் ஈஸ்டர் பண்டிகை.

நெஞ்சை உலுக்கும் இந்த நிகழ்வு, மனிதகுலத்திற்கு அறிவிக்கின்ற உண்மையாதெனில், துன்பங்களும், சோகங்களும் நிறைந்த மனிதவாழ்வில், அத்துயரத்தில் இருந்து விடுபடும் விமோசனமும், இருளுக்குப்பின் ஓர் விடியலும் என்ற நம்பிக்கையை ஊட்டுவது தான் என்று கூறியுள்ளார்..

கைதிகளுக்கு வடை, பாயாசத்துடன் சாப்பாடு:

இந் நிலையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் இருக்கும் 9 மத்திய சிறைகள் உள்பட 12 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17,867 கைதிகளுக்கும் வடை பாயாசத்துடன் மதிய உணவு வழங்கப்படுகிறது.

அதுபோல் சிறையில் இருக்கும் உறவினர்களை இன்று நேரடியாக வந்து பார்த்து பேசலாம். உறவினரை பார்க்க வழக்கமாக கொடுக்கும் மனுக்களை இன்று கொடுக்க தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X