For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!' - காசி ஆனந்தன் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

Kasianandan
சென்னை: ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.

திரைப்பட ஒளிப்பதிவாளர் (படம்: தூண்டில்) கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்தது.

கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், இயக்குநர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார்.

தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:

ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை... அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.

உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. வியட்நாம், தென் அமெரிக்கா, க்யூபா, சீனா, ரஷ்யா... என அனைத்து நாடுகளிலும் இன, நாடு விடுதலைக்கான போர் நடந்துள்ளது. ஆனால் அது அந்த மண்ணுக்குள்ளேயேதான் நிகழும்.

ஆனால் ஈழப்போர் மட்டும்தான், அந்த மண்ணிலும், மண்ணுக்கு வெளியேயும் பெரும் வீர்யத்துடன் நடக்கிறது.

உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு... நம்மைத் தவிர வேறு யார்?.

இன்று உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.

பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.

இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது... அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும்.

பயங்கரவாதி, சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப்பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிற பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வேலை இது.

துரோகிகளைக் களையெடுப்பது தவறல்ல...

எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் துரோகிகளைக் களையெடுப்பது தொன்று தொட்டு இருந்து வருவது.
இயக்கத்தைக் காத்து, இறுதி லட்சியத்தை அடைய அந்தத் தண்டனைகள் அவசியம். அவற்றைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இயக்கத்திலேயே சேருகிறார்கள்...

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் துரோகி ட்ராட்ஸ்கியை அமெரிக்காவிலும் துரத்தித் துரத்திக் கொன்ற ஸ்டாலின் பயங்கரவாதியா, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலையெடுத்துவிட்ட துரோகிகளைக் களையெடுத்த ம சே துங் பயங்கரவாதியா... இவர்களை உலகின் மாபெரும் புரட்சித் தலைவர்கள் என்று உலகமே கொண்டாடவில்லையா... பிரபாகரன் செய்ததில் மட்டும் என்ன பயங்கரவாதம் வந்துவிட்டது?

பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது... இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்... உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள்.

இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே... அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

தமிழினத் துரோகி மேயர் துரையப்பாவை அழித்துவிட்டுத்தான் முன்பு தமிழகம் வந்தார் பிரபாகரன். அன்று அவரை இருகரம் நீட்டி பாசத்துடன் அரவணைத்தவை அன்னை இந்திராவின் கரங்கள். இந்த பிராந்தியத்தின் அசைக்கமுடியாத தலைவி அவர். அவருக்குத் தெரியாதா பிரபாகரன் இயக்கம் செய்த களையெடுப்பு வேலை? தெரியும்... ஆனாலும் அவர் பிரபாகரனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். புலிகளுக்குப் பயிற்சியும் கொடுத்தார்.

ஒரு இனத்தை வாழ வைக்க சிலவற்றை மறக்கலாம்...

ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது?

3000 தமிழ் தாய் - சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய ராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?

புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே...

எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா... அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா?

எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்?

பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். இந்தியாவை உண்மையாக நேசிக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவனாக இப்போதும் நாம் உடனடியாக வேண்டுவது:

முழுமையான போர் நிறுத்தம், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம், தமிழீழம் மலரச் செய்ய வேண்டும், என்றார் காசி ஆனந்தன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X