For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'வட்டுக்கோட்டை அடிப்படையில் தமிழ் ஈழம்!'-நார்வே தமிழர்கள்

By Staff
Google Oneindia Tamil News

Norway Voter
ஆஸ்லோ: தமிழ் ஈழச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்குப் பதிவு உலகிலேயே முதல்முறையாக நார்வேயில் நடந்துள்ளது. இதில் வாக்களித்த தமிழர்களில் 99 சதவீதம் பேர், 'சுதந்திரமும் இறையாண்மையும் அரசியல் நிர்ணய உரிமையும் கொண்ட தமிழ் ஈழ தனி அரசு தங்களுக்கு வேண்டும்' என வாக்களித்துள்ளனர்.

அது என்ன வட்டுக்கோட்டை தீர்மானம்? திடீரென்று புலிகளும் சர்வதேச தமிழர்களும் அந்தத் தீர்மானத்தை மிகவும் வலியுறுத்திப் பேசுவதன் அவசியம் என்ன?

"இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்க வேண்டும்" ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, 33 வருடங்களுக்கு முன்னரே ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் பிரகடனம் செய்தனர்.

இதைத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள். புலிகள் ஆயுதமேந்துவதற்கு முன்பே உருவான தீர்மானம் இது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சமீபத்தில் கூட விடுதலைப் புலிகள் அமைப்பு கோரியிருந்தது.

இந்த தீர்மானத்துக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள், தனிஈழம் குறித்து என்ன நினைக்கிறார்கள், இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இன்னும் இன்னும் எந்த அளவு உறுதியுடன் உள்ளனர் என்பதை உலகுக்குத் தெரிவிக்க நார்வேயில் முதல் முறையாக இந்த வாக்கெடுப்பு நடந்தது.

99 சதவிகிதம் ஆதரவு!

புலம்பெயர்ந்து நார்வேயில் வாழும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இவர்களில் 98.85 சதவிகிதத்தினர், 'வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழமே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு' என்ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், நடுநிலையாளர்கள் என்ற பேதமின்றி அனைவரும் பங்கேற்ற தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வேயின் புகழ்பெற்ற பத்திரிகையான 'யூத்ருப்' இத்தேர்தலை முன்னின்று நடத்தியது. நார்வே நாட்டு சரித்திரத்திலேயே வேறு ஒரு நாட்டின் சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவே என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே முழுவதுமே தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களே.

11 தேர்தல் மையங்கள்:

தலைநகர் ஆஸ்லோ உள்ளிட்ட மொத்தம் 11 முக்கிய நகரங்களில் இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பெருமளவிலான தமிழர்கள் பங்கேற்று வாக்களித்தனர்.

திங்கள்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் வாக்குப்பதிவு முடிவுகளை 'யூத்ருப்' இதழ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 633 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 5 ஆயிரத்து 574 பேர் தமிழீழத் தனியரசுக்கு ஆதரவாகவும், 50 வாக்குகள் எதிராகவும், 9 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளதாக 'யூத்ருப்' தெரிவித்துள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 3 வாக்குச் சாவடிகளிலும், பர்கன், துறொண்ட்ஹைம், ஸ்தவாங்கர் ஆகிய பெருநகரங்கள் மற்றும் லோரன்ஸ்கூக், ஓலசுண்ட், மொல்ட, புளூறோ, துறொம்சோ, நூர்பியூர்ட் ஐட், நார்வீக், வோ ஆகிய மற்ற பிரதேசங்களிலும் சேர்த்து மொத்தம் 14 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.

பொதுவாக நார்வேயில் நடைபெறும் நாடாளுமன்ற, மாநகர, உள்ளாட்சி தேர்தல்களில் கூட வாக்குப்பதிவு 60 சதவிகிதத்தைத் தாண்டியதில்லையாம். ஆனால் இந்தத் தேர்தலில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர்.

1976ம் ஆண்டு ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானமே, 1977ம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் தமிழர் கட்சிகளை பெரும் வெற்றி பெறச் செய்தது.

ஆனால் 1977ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பங்களை ஜனநாயக வழிமுறைகளில் வெளிப்படுத்த முடியாதவாறு, 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டமும், பின்னர் 1983ல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட 6 ஆவது திருத்தமும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு, அவர்களை அடிமை நிலைக்கு தள்ளின.

அந்த வகையில், நார்வேயில் நடைபெற்ற இந்த தேர்தல் மூலம், 33 ஆண்டுகளுக்குப் பின்னர், முழுமையான ஜனநாயக வழிமுறையில் தமது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு கிட்டியுள்ளதாகவே உலகத் தமிழர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தேர்தல், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு புதிய உந்து சக்தியைத் தந்திருப்பதாகக் கருதப்படுகிறது. அடுத்து பிரான்ஸிலும் இதுகுறித்த தேர்தல் நடக்க உள்ளது. இதில் 64க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புலம் பெயர் தமிழர்களும் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்னெடுக்கும்பட்சத்தில், ஐ.நா. சபை மூலம் இலங்கைக்கு பெரிய அழுத்தம் உண்டாக்கலாம் என தமிழர் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X