For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனெக்டிகட்டில் நடந்த அரங்கேற்றம்!

By Staff
Google Oneindia Tamil News

கடந்த 20ம் தேதி அமெரி்க்காவின் கனெக்டிகட் ஆக்ஸ்போர்ட் பள்ளியில் செல்வி.லாவண்யா மாடபுசியின் நடன அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜெயந்தி சேஷன் மற்றும் காயத்ரி பாலகுருநாதன் ஆகியோரின் மாணவியான லாவண்யா தனது பேசும் விழிகளாலும் கொஞ்சும் சலங்கைகளாலும் பார்வையாளர்களை நான்கு மணி நேரத்திற்கும் மேலாகக் கட்டிப் போட்டார்.

முன்னதாக வெங்கடரமணன் மாடபுசியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கீதா ரவிச்சந்திரன் மற்றும் வினய் மாடபுசியின் தொகுப்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் காயத்ரியின் விளக்கவுரைக்கு லாவண்யா தனது அபிநயம் மூலம் செயல்முறை வடிவம் கொடுத்து, நமது இந்தியக் கலையையும் கலாச்சாரத்தையும் மிக எளிய முறையில் அற்புதமாக வெளிப்படுத்தினார்.

பாபு பரமேஸ்வரனின் அருமையான குரல் வளமும், ரங்கநாதன் சேகரின் மிருதங்கமும் சுதாகர் மகாலிங்கத்தின் குழலிசையும் வினோத் கே. மனாவின் வயலின் இசையும் நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பெரிதும் வித்திட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நாட்டியாஞ்சலியாக விநாயகர், சரஸ்வதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஸ்துதிகளைக் கொண்ட ராக தாள மாலிகைக்கு மிக அழகாக ஆடினார் லாவண்யா.

அடுத்து ஹம்சானந்தி ராகத்தில் அமைந்த அம்புஜம் கிருஷ்ணாவின் கண்ணன் மதுர கீதத்திலும், இறுதியாக வந்த தாயே யசோதா என்ற ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் கீர்த்தனத்தின் போதும் அனைவரையும் அந்த கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் சஞ்சரிக்கச் செய்தார் என்றால், நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் திருமணத்தை சித்திரித்து நம்மை எல்லாம் ஸ்ரீ ரங்கத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டார் லாவ்ண்யா.

அடுத்து வந்த இடது பதம் தூக்கி என்ற பாபநாசம் சிவன் இயற்றிய கமாஸ் ராகப் பாடல் பரம செளக்யமாக இருந்தது. அதில் திச்ர நடையில் அமைந்த சரணத்தில் திருவடி சிலம்புகள் கலீர் கலீரென என்ற வரிகளுக்கு லாவண்யாவின் பாத வேலைகள் தங்கத்தில் பதித்த வைரக் கற்களாக ஜொலித்தன.

இதையடுத்து யமன் கல்யாணியில் அமைந்த ஸ்ரீ ராம சந்த்ர கிருபாளு.. என்ற ஸ்ரீ துளசிதாசரின் பாடலில் ராவண கும்பகர்ணாதிகளை ஸ்ரீ ராமர் வதம் செய்யும் காட்சியை அபிநயிக்கும் போது அவர் கண்களில் கோபம் கொப்பளித்தது.

அதே பாடலில் இறுதி வரிகளில் தானே துளசிதாசராக மாறி திவ்யநாம சங்கிர்த்தனம் செய்து காட்டிய போது நம்மையறியாமல் நமது கைகளும் தாளமிட்டன.

நடனக் கலைஞர் தனஞ்சயன் இயற்றிய ஷண்முகப்ரியா ராக தில்லானாவை மிகவும் விறு விறுப்புடன் ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

கச்சிதமான ஹஸ்த முத்திரைகளில் அவரது கை வண்ணத்தையும் துல்லியமான பாத வேலைகளில் அவரது கால் வண்ணத்தையும் காட்டி அனைவரது பாராட்டுதல்களையும் ஒரு சேரப் பெற்றார்.

வரும் ஆண்டில் கல்லூரியில் நுழையப் போகும் லாவண்யா தனது 8ம் வயதில் இருந்தே பரதம் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதியி் லலிதா மாடபுசி நன்றி உரையாற்றினார். மாடபுசி தம்பதியினரின் பேச்சின் சிறப்பம்சம் என்னவென்றால்,நிகழ்ச்சியில் பல அமெரிக்கர்களும் கலந்து கொண்ட நிலையில், இருவருமே உலகப் பொதுமறையாம் திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

இவர்களின் மகன் வினய் மாடபுசி தமிழ் இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசிப்பவர். தமிழ் மட்டுமல்லாமல் ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்சு என பல மொழிகளையும் தனது சுய முயற்சியால் கற்றவர். இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களே தமிழ் கற்பதை கௌரவக் குறைவாக நினைக்கும் இக்காலத்தில் வினய் மாடபுசி போன்ற இளைஞர்களைக் காணும் போது " சென்றிடுவீர் எட்டுத் திக்கும்- கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X