For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசி நேர தீபாவளி பர்ச்சேஸ்- தி.நகரில் மக்கள் வெள்ளம்

Google Oneindia Tamil News

Chennai T. Nagar flooded with people for Diwali purchase
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதைத் தொடர்ந்து கடைசி நேர பர்ச்சேஸில் மக்கள் பெரும் ஆர்வத்துடன் சென்னை தியாகராய நகரை முற்றுகையிட்டுள்ளனர்.

சென்னை என்றவுடன் நினைவுக்கு வருவது - எல்.ஐ.சி மட்டும் அல்ல, தி.நகரும்தான். தியாகராய நகர் எனப்படும் தி.நகர் சென்னை மாநகரின் இருதயப் பகுதியாகி விட்டது.

நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் நிரம்பிக் கிடக்கும் தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் உள்ளிட்டவற்றில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கடைசி நேர பர்ச்சேஸில் மக்கள் பர்ஸ்களை பஞ்சாக பறக்க விட்டுக் கொண்டுள்ளனர். போகும் போது பர்ஸ் கணக்கப் போகிறவர்கள் வரும்போது கை கணக்க வருகிறார்கள்.

சென்னை மக்கள் சற்று விவரமாகி விட்டார்கள். தி.நகரில் போய்த்தான் வாங்க வேண்டுமா என்று நினைத்து ஆங்காங்கு உள்ள பிற கடைகளைத் தேர்வு செய்து (இங்கு உண்மையில் தி.நகர் கடைகளை விட விலையும் குறைவாக இருக்கும், தரமும் திருப்திகரமாக இருக்கும்) அங்கு போய் கூட்ட நெரிசலில் சிக்காமல் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

ஆனால் அக்கம்பக்கத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளியை விட்டால் வேறு நாளில் பொருளே வாங்க முடியாது என்பது போல, ஒட்டுமொத்தமாக பல்வேறு பொருட்களையும், சென்னையில் முகாமிட்டு வாங்கி விடுகிறார்கள்.

இவர்களின் முக்கிய அட்டாக் ஏரியாக்கள் தி.நகர் மற்றும் புரசைவாக்கம்தான். முதலில் தி.நகர் பக்கம் காலை வைக்கும் இவர்கள் ரங்கநாதன் தெரு, தெற்கு உஸ்மான் சாலைகளை அலசி எடுத்து பொருட்களை அள்ளுகிறார்கள்.

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய மக்கள் நடைமேம்பாலத்தில் ஏறி ரெங்கநாதன் தெருவிற்கு செல்வதற்கே 20 நிமிடங்கள் ஆகிறது. அந்த அளவுக்கு அங்கே கூட்டம் அலைமோதுகிறது. நடைமேம்பாலத்தில் உள்ள மக்கள் கூட்டத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினார்கள்.

வங்கக் கடலோரம், மக்கள் தலை கண்டேன், அலைகள் நாணக் கண்டேன் என்று அரசியல்வாதிகள் வசனம் பேசுவதைப் போல, இது மக்கள் கூட்டமா அல்லது வங்கக் கடல் புகுந்து விட்டதா என்று வியக்கும் வண்ணம் கூட்டம் காணப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வளவுக் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், ஒரு கடைக்குள் போய் சுற்றுலா வந்து விட்டு, அடுத்த கடைக்குள் என மாறி மாறி மக்கள் போய்க் கொண்டிருப்பதுதான். சளைக்காமல் அவர்கள் கடைகளை மாற்றி மாற்றி அலச, அவர்களுடன் துணைக்கு வருபவர்கள் பாடுதான் மகா கஷ்டம்.

கூட்ட நெரிசல் என்பதால், துணிகளை ஆற,அமர பார்த்து தேர்ந்தெடுக்க முடியாத நிலை. ஒரு சேலையை எடுத்துப் பிரித்தால் அதே சேலையை பத்து பேர் சேர்ந்து பார்த்து செலக்ட் செய்து பெரும் குழப்பமும் ஏற்படுகிறது.

இவ்வளவு கூட்டம் இருப்பதால் நிச்சயம் திருடர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதால் போலீஸாரும் முடிந்தவரை மப்டியி்ல் உலா வந்தவண்ணம் உள்ளனர். ஆங்காங்கு போலீஸ் பூத்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஜேப்படி உள்ளிட்ட புகார்களை அவர்களிடம் சொல்லலாம். குழந்தைகள் காணாமல் போனால் இந்த பூத்தினால் மைக் மூலம் அறிவித்து குழந்தைகளைத் தேடிப் பிடித்துக் கொடுக்கிறார்கள் போலீஸார்.

இதில் போக்குவரத்து போலீஸாரின் நிலைதான் ரொம்பக் கஷ்டம். கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவதிலும், வாகனப் போக்குவரத்தை சீர்படுத்துவற்கும் அவர்கள் பெரும்பாடு படுகின்றனர்.

அந்தப் பக்கம் போகாதீங்க என்று போலீஸ்காரர் கூறிக் கொண்டிருக்கும்போதே, அத்தனை பேரும் திமுதிமுன அவர் காட்டிய பகுதி வழியாக புகுந்து புறப்படும்போது போலீஸ்காரரின் நிலையை வார்த்தையில் சொல்ல முடியாது. இப்படிப் போங்க என்று அவர்கள் கூறினால், அதற்கு ஏறுக்கு மாறாகத்தான் மக்கள் போகிறார்கள். அவர்களாக போவதில்லை, கூட்ட நெரிசல் அவர்களை அப்படி இழுத்துக் கொண்டு போய் விடுகிறது.

அடுத்த நான்கு நாட்களும் தி.நகரில் இன்னும் பெரிய அளவில் கூட்டம் கூடும் என்பதால் போலீஸார் தொடர்ந்து விழிப்புடன் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X