For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச்ஐவியை சுமந்தாலும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் நடத்தும் உசிலம்பட்டி விஜயராணி

Google Oneindia Tamil News

HIV Red Ribbon
மதுரை: தென் தமிழகத்தின் சிறு நகரான உசிலம்பட்டில், உள்ள அந்த இட்லிக் கடை அப்பகுதியில் மிகவும் பிரபலம். கடையின் இட்லிக்காக மட்டுமல்ல, அதை நடத்தும் விஜயராணி என்ற பெண்மணிக்காகவும்.

எச்ஐவி பாசிட்டிவுடன் போராடி வருபவர் விஜயராணி. ஆனால் அதன் பாதிப்பை தனது மனதிலும், முகத்திலும் சற்றும் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவான சிந்தனையுடன், திடமான நம்பிக்கையுடனும் பாசிட்டிவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜயராணி.

கூட்டம் அலை மோதும் உசிலம்பட்டி மார்க்கெட் பகுதியில் இட்லி, தோசை விற்கும் சிறிய கடையை நடத்தி வருகிறார் விஜயராணி. விஜயராணியைப் பற்றி தெரிந்திருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தி வரும் விஜயராணியை வியந்தபடி அவரிடம் இட்லி, தோசை வாங்க ஆர்வத்துடன் வருகின்றனர்.

விஜயராணியுடன் சுமதி என்பவரும் இணைந்து இந்த கடையை நடத்தி வருகிறார். சுமதியும் ஒரு எச்ஐவி பாதிப்பாளிதான். இருவரும் இணைந்து ஒரு நாளைக்கு ரூ. 500 வரை வியாபாரம் செய்கின்றனர்.

3 ஆண்டுகளுக்கு முன்புதான் விஜயராணிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மட்டுமல்லாமல் அவரது 6 வயது மகனுக்கும் கூட அந்தப் பாதிப்பு இருக்கிறது. அதேசமயம், அவரது கணவர் இளங்கோவுக்கு இல்லை. இதனால் மனைவியை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார் இளங்கோ. இறுதியில் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றார்.

விஜயராணிக்கு இளங்கோ 2வது கணவர்தான். முதல் கணவர் மூலமாகத்தான் விஜயராணியை இந்த நோய் பற்றிக் கொண்டது. முதல் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகுதான் அவர் இளங்கோவை மணம் புரிந்தார். மொத்தத்தில் அப்பாவியான விஜயராணிக்கு, தானாக வந்து சேர்ந்து கொண்டது இந்த பாதிப்பு.

" எனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும் நான் சிதறிப் போய் விட்டேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிறகுதான் எச்ஐவி, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி வரும் வைகை நெட்வொர்க் நிறுவனம் குறித்து தெரிய வந்தது. இங்கு உறுப்பினரானேன்.

பிறகுதான் இட்லிக் கடை வைத்து வாழ்க்கையைத் தொடருவது என்ற முடிவுக்கு வந்தேன். இங்கு உறுப்பினராக உள்ள யாருமே எங்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருக்கிறது என்பதை மறைப்பதில்லை. எங்களைப் பற்றி நாலு பேருக்குக் கூறி, எங்களை இந்த சமுதாயம் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம். நாங்கள் வாழ ஆதரவு தாருங்கள் என்று தன்னம்பிக்கையுடன் கேட்கிறோம்.

மக்களுக்கும் இப்போது எச்ஐவி, எய்ட்ஸ் பரவல் குறித்து தெளிவான விழிப்புணர்வு உள்ளது.

நான் மற்ற பெண்களைப் போலத்தான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எங்களது இட்லிக் கடை பிசினஸும் நன்றாகவே போகிறது. இந்த பாதிப்புடனும் வெற்றிகரமாக வாழ முடியும் என்பதற்கு நானும், சுமதியுமே நல்ல உதாரணம்.

எனது மகனை அவன் படித்து வரும் பள்ளியில் சேர்க்கும்போதே அவனுக்கு உள்ள பாதிப்பை கூறி விட்டுத்தான் சேர்த்தேன்.அதை நான் மறைக்க விரும்பவில்லை. இப்போது அவன் ஐந்தாவது படித்து வருகிறான். முதல் பத்து ரேங்குக்குள் வரும் சிறந்த மாணவனாகவும் விளங்குகிறான் என்றார் விஜயராணி.

விஜயராணியின் கடைக்கு வாடிக்கையாளரான ராஜபாண்டியன் என்பவர் கூறுகையில், விஜயராணியைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை சற்றும் இல்லாதவர்கள் கூட புத்துணர்ச்சி பெற்று விடுவார்கள். அவ்வளவு கெளரவமான, தன்னம்பிக்கையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அவர்.

அதேபோல அவரது கடை இட்லி, தோசையை அடித்துக்கொள்ள இப்பகுதியில் வேறு கடையே இல்லை. அவ்வளவு சுவையாக, தரமாக இருக்கும் என்கிறார்.

விஜயராணியின் பிஆர்ஓ போலவே செயல்படுகிறார் உள்ளூர்ப் பெண்மணியான அன்னத்தாய். நான் எங்கு போனாலும் சரி, விஜயராணியின் கடையைப் பற்றிச் சொல்லி, இட்லி, தோசை வாங்குவதாக இருந்தால் இங்கேயே வந்து வாங்குங்கள் என்று சொல்வேன். அதேபோல விஜயராணியின் தனனம்பிக்கையையும் புகழ்ந்து கூறுவேன். இதை எனது கடமையாகவே நினைக்கிறேன் என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தால் கூட சுருண்டு போகும் இக்காலத்தில், விஜயராணியின் தன்னம்பிக்கை மிகவும் உயரியது. எச்ஐவி, எய்ட்ஸ் மட்டுமல்ல வேறு எந்த உடல் ரீதியான பாதிப்பு வந்தவர்களுக்கும் கூட விஜயராணி ஒரு மிகச் சிறந்த, வெற்றிகரமான உதாரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X