For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்

Google Oneindia Tamil News

Samarasam
- முனைவர் மு. இளங்கோவன்

நான் வேலூர் மாவட்டம் கலவை, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது (1999-2005) ஆர்க்காட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அடிக்கடி வேலூரில் நடக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம். வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் அடிக்கடி மிகச்சிறந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அந்தக் காலச்சூழலில் அடிக்கடி தெ.சமரசம் அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை அறிவேன். அவர்களின் துணைவியார் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் புகழ்பெற்ற மருத்துவச் சேவைகளையும் அறிவேன்.அவர்களுக்கு அழகிய வளமனை போன்ற வீடும், மருத்துவமனையும் வேலூர் நகரில் இருந்து இலக்கிய அறிஞர்களுக்கு வேடந்தாங்கலாக உதவும்.

நான் வேலூர் முத்துரங்கம் கல்லூரிக்கு அஞ்சல் வழி வகுப்பெடுக்கச் செல்லும்பொழுது ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் இல்லம் சென்று கண்டு மகிழ்வதுண்டு. வழக்கறிஞர், மருத்துவர் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருகின்றரே என்று நான் வியப்படைவேன். அவர்களை இரண்டாண்டுக்கு முன்பு சென்று தனிப்பட்ட முறையில் கண்டு உரையாடி அவர்களின் வாழ்வியலை அறிந்து வந்திருந்தேன்.

அதுபொழுது மருத்துவர் அம்மா அவர்களுக்குத் தமிழ் இணையத்தையும் தமிழ்த்தட்டச்சையும் அறிமுகப்படுத்தியமையும் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் அம்மா அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இணையத்தை ஒரு மாணவி போல் அமர்ந்து கற்றுக் கொண்டார்கள் என்பதை நினைக்கும்பொழுது உள்ளபடியே பூரிப்படைகின்றேன். இவர்களைப் போலும் தமிழார்வம், சமூக விடுதலை உணர்வுடையவர்கள் உலகெங்கும் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் அறியும்பொருட்டுத் தெ.சமரசம், மருத்துவர் ச.பத்மா அம்மா ஆகியோரின் இணைந்த தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் 02.12.1934 இல் சுயமரியாதை உணர்வுடைய குடும்பம் சார்ந்த தெய்வசிகாமணி, அபரஞ்சிதம் என்னும் பெரியோர்க்கு மகனாகப் பிறந்து தந்தை பெரியார் அவர்களின் மடியில் அமர்த்தி அனைவருக்கும் இசைவாக விளங்க வேண்டும் என்ற விருப்பில் ஐயாவின் வாயால் சமரசம் என்று பெயர் சூட்டப்பெற்ற பெருமைக்குரியவர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள்.

தெ.சமரசம் அவர்களின் தாயார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றவர். தந்தையாரும் பலமுறை சிறை சென்று வந்த சிறப்பிற்கு உரியவர்.

தொடக்கக்கல்வியை ஆம்பலூரிலும் பின்னர் பட்டப்படிப்பை வாணியம்பாடியிலும் முடித்தவர்.சட்டப்படிப்பைச் சென்னையில் முடித்தவர். கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் கழகப்பணிகளில் தீவிரமாக இருந்தவர். சட்டக் கல்லூரித் தி.மு.க.கிளைச் செயலாளராக ஆலடி அருணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

சட்டப்படிப்பு முடிந்ததும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களிடத்தில் சென்னையிலும், வேலூரில் குற்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்ற ஏ.கே.தண்டபாணி அவர்களிடத்து வேலூரிலும் இவர் மிகச்சிறந்த பயிற்சி பெற்றார்.

தெ.சமரசம் அவர்களின் திருமணத்துக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1966 இல் பண்ணுருட்டியில் திருமணம் நடைபெற்றது. மருத்துவர் அம்மா அவர்கள் பிறந்த ஊர் பண்ணுருட்டி என்பதே காரணம் ஆகும். அம்மா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைந்தது ஐயாவின் வாழ்வில் அரும்பணிகளுக்குப் பேருதவியாக இருந்தது.

மகன் இனியன், மகள் கனிமொழி இருவரும் அம்மாவைப் போல் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். இவருடைய உடன் பிறப்பு கவிஞர் தாமரைச்செல்வி-கவிஞர் சேரன் தமிழோடு இணைந்து வாழ்கின்றார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணிபுரியும் தெ.சமரசம் அவர்கள் மாவட்ட அரசு வழக்குரைஞராக, மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, வேலூர் நகராட்சி வழக்குரைஞராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அறிவுரைஞராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.சிற்றிதழ்கள் பலவற்றின் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது உதவுவதும்,எழுதுவதும் இவர் இயல்பு.

எழுத்துச் செம்மல்,பயணநூல் பகலவன், சிந்தனைச் சுடர், ரோட்டரிச் சுடர், செந்தமிழ்ச் செம்மல் எனப் பல்வேறு விருதுகள் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. எழில்கொஞ்சும் இலங்கை, வரலாறு படைக்கும் ரோட்டரி, மனம் கவரும் மலேசியா, நெஞ்சம் கவரும் நியூசிலாந்து, இந்தியாவைக் காப்போம், நீதியின் கண்கள் உள்ளிட்ட நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.

மனம் கவரும் மலேசியா நூலுக்குத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.வேலூர்த் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களுடன் இணைந்து பல தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.

தமிழ் உணர்வு சார்ந்த தெ.சமரசம் ஐயா அவர்களும்,மருத்துவர் பத்மா அம்மா அவர்களும் வேலூரின் இரு புகழ்மணிகள் என்றால் அது பொருத்தமாக அமையும்.

நன்றி: http://muelangovan.blogspot.com/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X