For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்டு வந்தேன் கவிப் பேரரசை!

Google Oneindia Tamil News

- முனைவர் மு.இளங்கோவன்

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்ற காலத்திலிருந்து (1987-92)கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளிலும் திரைப்பாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன்.அவர் கவிதை வரிகள் பல எனக்கு மனப்பாடமாக இருக்கும்.

பின்னாளில் பேராசிரியர் பணியேற்ற பிறகு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியச் சிறப்பை விளக்குமிடத்து, இலக்கண அமைப்புகளை விளக்குமிடத்துச் சங்கப்பனுவல்களைச் சான்றுகாட்டுவதுபோல் கவிப்பேரரசரின் திரைப்பாட்டு வரிகளைப் பொருத்தமான இடங்களில் இணைத்துப் பாடிக்காட்டுவேன். மாணவர்கள் வகுப்பறையை வேப்பங்காயாய் நினைக்காமல் ஆர்வமுடன் தமிழமுது பருகும் பூங்காவாக நினைப்பார்கள்.

கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் நான் பணியாற்றிய காலத்தில் மாணவர்களுக்குத் தமிழில் ஈடுபாடு வரும்படி இசைநயம் உள்ள இடங்களையும், எதுகை, மோனை, மாத்திரை, அந்தாதி, இயைபு போன்ற இலக்கணம் தொடர்புடைய இடங்களையும் இசையுடன் பாடி விளக்குவது உண்டு.

அதுபோல் பல கருத்தரங்குகளிலும் திரைப்பாட்டு வரிகளைப் பொருத்திப் பாடிக்காட்டுவதால் -இலக்கணத்தை விளக்குவதால் அந்த எடுத்துக்காட்டுகளுக்காக இலக்கணப்பகுதியை நினைவுகூர்பவர்களும் உண்டு. இதுபோன்ற வேளைகளில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் திரைப்பாட்டு வரிகள் எனக்குக் கைகொடுத்து உதவும். அவரின் பாட்டுவரிகள் பல உயர் இலக்கியத் தரமுடையன.

"தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது...",

"நறுக்கான தேகத்துக்கு நல்லெண்ண தேய்ச்சுவிட ஆசவச்சேன்",

"பாசிமணி இரண்டு கோக்கையிலே பாவிமனசையும் கோத்தவளே",

"பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்"

" கீ....தம் சங்கீதம்...",

"உளுந்து விதைக்கையிலே...",

"ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ போறாளே பொன்னுத்தாயி...பொதிமாட்டு வண்டி மேலே போட்டு வச்ச மூட்ட போல",

"வைகைக்குக் கடலில் சேர யோகம் இல்ல யோகம் இல்ல",

"சின்ன சின்ன ஆசை",

"கொடைகண்டு மிரளாத கோடாங்கி காளை... தாவணி பாத்து மிரளும்",

"கத்தி இரண்டு வச்சிருக்கும் கண்ணே சாட்சி"

"முத்து முத்துப் பெண்ணே உந்தன் கண்ணைக் கண்டும்
முள்ளு தச்ச ஆடுபோல உள்ளம் நொண்டும்",

"பனிவிழும் மலர்வனம் உன்பார்வை ஒருவரம்"

"மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள்'"

"பாறையிலே முட்டிக்கிட்டு முட்டைக்கென்ன வேதாந்தம்",

"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்"

உள்ளிட்ட பல்லாயிரம் வரிகள் ஒவ்வொன்றையும் மணிக்கணக்கில் என்னால் விளக்கமுடியும். அந்த அளவு அவர் வரிகளில் ஈடுபாடும் பயிற்சியும் எனக்கு உண்டு.

அவற்றையெல்லாம் கவிப்பேரரசரிடம் சொல்லி மகிழும் வாய்ப்பு இல்லாமல் மாணவர் மன்றங்களில் மட்டும் எடுத்துரைத்தவண்ணம் இருந்தேன்.

அண்மையில் இணையம் வழியாக அறிமுகமான நண்பர் திரு.மு.இராசசேகர் அவர்கள் புதுவை வந்திருந்தார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல்களில் எனக்கிருந்த ஈடுபாட்டை அறிந்து மகிழ்ந்து கவிப்பேரரசு அவர்களை நான் சந்திக்க வேண்டும் என்ற பெரிய விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழ் இணையப் பரவலில் ஈடுபாடு காட்டும் நான் பணியின் பொருட்டும், வெளியூர்ப் பயிலரங்கச் செலவுகளாலும், குடும்பப்பொறுப்புகள் காரணமாகவும் நேரம் கிடைக்காமல் இருந்துவந்தேன்.

திரு.மு.இராசசேகர் அவர்கள் இந்தக் கிழமை நான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்திப்பதற்குரிய ஒரு சூழலை உருவாக்கி, எனக்காகச் சென்னையில் (14.11.2010)காத்திருந்தார். குறித்த நேரத்துக்கு நானும் நண்பர் மு.இராசசேகர் அவர்களும் கவிப்பேரரசர் அவர்களின் வளமனைக்குச் சென்றோம்.

கவிப்பேரரசர் அவர்கள் அன்பொழுக வரவேற்றார். கவிப்பேரரசர் அவர்களின் தமிழை அள்ளிப் பருகியதன் நன்றிக்கொடையாக அவர்களுக்கு ஓர் எளிய ஆடையைப் போர்த்தி மகிழ்ந்தேன். என் சிற்றூர்ப்புறம் சார்ந்த வாழ்க்கை, படிப்பு, பணிநிலை, தமிழ்ஈடுபாடு, இணையத்துறையில் என் முயற்சி இவற்றைக் கேட்டு வியப்புற்றார். தமிழ்நலம் கருதி நான் செய்யும் பல பணிகளையும் நண்பர் மு.இராசசேகர் அவர்கள் இடையிடையே நினைவுகூர்ந்தார்.

இன்றையத் தொழில் நுட்ப உலகில் இணையத்தின் வீச்சையும், தேவையையும் நன்கு அறிந்திருந்த கவிப்பேரரசர் அவர்கள் நம் தமிழகத்தின் தமிழாய்வாளர்கள், பேராசிரியர்களின் இணையம் சார்ந்த அறிமுகம் இல்லாத நிலைக்கு இரங்கினார். உலகெங்கும் உள்ளவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தங்கள் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தும் சூழலில் தமிழர்கள் கணினி, இணையம் பற்றி அறியாமல் உள்ள நிலையை மாற்றுவது என்று உறுதியேற்றார்.

அதன்படி உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் வகையில் தமிழ் இணையச் சமூகம் ஒன்றை உருவாக்குவோம் என்று சூளுரைத்தார். இந்த முயற்சிக்குத் தம் அனைத்து உதவிகளையும் எந்த நொடியும் செய்ய ஆயத்தமாக இருப்பதைக் கவிப்பேரரசர் குறிப்பிட்டார்.

இணையத்தால் உலகெங்கும் பரவியுள்ளவர்களைத் தொடர்புகொள்வது எளிது என்றுகூறி இணையத்தைப் பொருத்தவரை தூரம் என்பது 0 கி.மீ என்றமை எங்களுக்கு வியப்பாக இருந்தது. இலாஸ் ஏஞ்செல்சில் ஒரு தமிழன் உதவிக்குத் தவித்தால் அடுத்த நொடியே உதவும்படித் தமிழ்சமூக முன்னேற்றத்துக்கு இணையத்தை அறிமுகப் படுத்துவோம் என்று கூறியமை எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியைத் தந்தது.

திரைத்துறை சார்ந்து எங்கள் சந்திப்பு இருக்கும் என்று நினைத்த எங்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தமிழாசிரியர் முத்தொள்ளாயிரத்துக்குள் தங்கள் மூச்சை முடித்துக்கொள்கின்றார்கள். இதனை மாற்றியே தீரவேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கவிப்பேரரசர் பேசினார்.

பின்னர் எங்கள் பேச்சு கவிப்பேரரசரின் அடுத்த நூல் முயற்சி பற்றி நீண்டது.

கவிப்பேரரசர் அவர்களின் திரைப்பாட்டுகள் பல இலக்கியத் தரத்தனவாகும். அவற்றுள் இலக்கியச் செழுமையுடைய ஆயிரம் பாடல்களை மட்டும் தொகுத்து விரைவில் நூலாக வெளிக்கொணரும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டமை எங்களுக்குப் பெருமகிழ்வாக இருந்தது.

"ஆயிரம் பாடல்கள்" நூல் தொகுதியை இதுவரை பதினாறுமுறை கவிப்பேரரசர் அவர்கள் பார்வையிட்டுச் செப்பமிட்டுள்ளார். 1200 பக்கம் அளவில் வெளிவரும் இந்த நூலில் கவிப்பேரரசர் அவர்களின் 1000 திரைப்பாடல்கள் இடம்பெற உள்ளன."இது ஒரு பொன்மாலைப் பொழுது" தொடங்கி 'எந்திரன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அரிமா அரிமா ஆயிரம் அரிமாப்' பாடல் வரையில் கவிப்பேரரசர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் சூழல், நயம், சிறப்பு உரைக்கும் முன்னுரை அவரால் எழுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வு முன்னுரையாகப் பதினைந்து பக்கம் கவிப்பேரரசர் எழுதியுள்ள அரிய பகுதிகள் திரை இலக்கிய வரலாற்றில் மேற்கோள் காட்டும் தரத்தினையுடையது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இந்த நூலுக்கு எட்டுப்பக்கம் அணிந்துரை வழங்கியுள்ளார். ஒரே தொகுதியாக இந்தநூல் உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இடம்பெற உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் திரை இலக்கியமாக அந்த நூல் வெளிவர வேண்டும் என்று வாழ்த்தி அவர்களிடம் விடைபெற்றோம்.

நன்றி:http://muelangovan.blogspot.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X