For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இணையம் கற்போம் நூல்-2ம் பதிப்பு-வைரமுத்துவின் அணிந்துரையுடன் வெளியீடு

Google Oneindia Tamil News

- முனைவர் மு. இளங்கோவன்

2009 இல் நான் எழுதி வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்ட இணையம் கற்போம் நூல் விற்பனையில் இல்லாமல் இருந்தது. எனவே மேலும் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டு, தேவையான விளக்கப் படங்களுடன் 176 பக்கங்களில் செம்பதிப்பாக அழகிய வண்ணப்படத்துடன் வெளிவந்துள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அணிந்துரை நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தமிழ் இணையம் பற்றி அறிய ஆர்வம் உடையவர்களுக்கு இந்த நூல் நல்ல அறிமுக நூலாக அமையும். தமிழ்க் கணினி, இணையத்திற்கு உழைத்தோர் இந்த நூலில் நினைவுகூரப்பட்டுள்ளனர். இணையத்தில் உள்ள தமிழ் வளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அரிய அணிந்துரை

இணையற்ற இணைய நூல்

இணையம் கற்போம் என்னும் இந்த இணைய நூலைத் தமிழின் காலத்
தேவை என்று கருதலாம். இந்த நூலைப் படைத்திருப்பதன் வாயிலாக
முனைவர் மு.இளங்கோவன் என்ற ஒரு புலவர் உலகத் தமிழராக உயர்ந்து
நிற்கிறார்.

'இணையம்" என்ற உலக வலைத்தளத்தைப் பாமரரும்
புரிந்துகொள்ளும் வண்ணம், ஒருபெண்பால் ஆசிரியரைப்போல் அன்பால் விளக்குகிறது இந்த அரிய நூல்.

கல்லிலும் பனைஓலையிலும் சுட்டமண்ணிலும் தோலிலும் செப்பேட்டிலும் நாணயத்திலும் காகிதத்திலும் திரையிலும் காலந்தோறும் தாவித் தாவி வந்த தமிழ் இந்த மின்னணுயுகத்தில் இணையத்தில் ஏறி அமர்ந்துகொள்வது தவிர்க்கவியலாதது.

இனிவரும் நூற்றாண்டுகளில் இணையத்தில் ஏறாத மொழி
நிலைபெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துபோகும் என்றே சொல்லத்
தோன்றுகிறது.

ஆனால் இந்தியமொழிகளுள் இணையம் ஏறிய முதல்மொழி
தமிழ்மொழிதான் என்ற பெருமையை முனைவர் மு.இளங்கோவன் இந்
நூலில் பதிவுசெய்கிறார்.

கைத்தொலைபேசியும் மின்சாரமும் போலத் தமிழர்களின் அன்றாடப்
பயன்பாட்டில் இணையம் வந்தே தீரும் என்று அழுத்திச் சொல்கிறார்.

இணையத்தின் பயன்பாடு துய்க்கத் தட்டச்சு பயிலவேண்டும்; ஆனால் தட்டச்சு பயில்வதொன்றும் எட்டாத உயரமன்று; ஒற்றை விரலால் கூடத் தட்டச்சு பயின்று வெற்றி பெற்றவர்கள் உண்டு என்று
நம்பிக்கையூட்டுகிறார்.

இணையத்தின் சிக்கல்களை மட்டும் சொல்லி நம்மைச் சிக்க
வைக்காமல் சிக்கெடுக்கும் தீர்வுகளையும் சொல்கிறார்.

ஒரு கிராமத்து இளைஞன் தன் முயற்சியால் படிப்படியாக முன்னேறி இணையத்தை எட்டி, அதில் தனக்கென்று ஒரு தனியரசு கட்டி, 315 மொழிகளில் மொழிபெயர்க்கத் தக்க நிறுவனத்தை உண்டாக்கி வெற்றிபெற்றதை விவரிக்கிறார்; அதை வாசித்தபொழுது ஒரு தமிழனின் வெற்றிகண்டு விம்மியது நெஞ்சம்.

விக்கிப்பீடியா என்ற உலக அறிவுப்பெட்டகத்துக்குள் பிறமொழிக் கட்டுரைகள் இடம்பிடித்த அளவுக்குத் தமிழ்க் கட்டுரைகள் இடம்பிடிக்கவில்லை என்ற ஆதங்கத்தை முனைவர் அனந்தகிருட்டினன், முதல்வர் கலைஞர் முன்பு வெளிப்படுத்தியபோது நான் அருகிலிருந்தேன். அதே ஆதங்கம் முனைவர் மு.இளங்கோவனுக்கும் இருக்கிறது.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதைக் கல்வி நிறுவனங்கள் ஒரு
பாடமாக்க வேண்டும் என்ற முதன்மைக் கருத்தை முன்மொழிந்திருக்கும்
நூலாசிரியரை நான் வழிமொழிகின்றேன்.

மூளையால் மட்டுமே முதன்மைபெறும் அறிவு நூற்றாண்டுக்குள் உலகம் நகரத் தொடங்கிவிட்டது.

இனி எந்த இனம் தாய்மொழியால் அறிவுபெறுகிறதோ தாய்மொழிக்கு அறிவைத் தருகிறதோ அந்த இனம்தான் வாழும்; எந்த இனம் அந்த அறிவை நவீன அறிவியல் வாகனங்களில் ஏற்றி உலகப் பொதுமை செய்கிறதோ அந்த இனம்தான் வளரும்.

தமிழையும் தமிழரையும் அப்படி வாழவைக்கவும் வேண்டும்; வளர வைக்கவும் வேண்டும். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு நூலாகத்தான் இந்த நூலை நான் கருதுகிறேன்.

நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களைப் பெரிதும்
பாராட்டுகிறேன். இவரைப் போன்ற இளைஞர்களைத்தான் என் கவிதை
கனவு கண்டு வருகிறது.

தமிழ் இலக்கணம், இலக்கியம் மட்டுமே கற்ற புலவர்கள் பலர்
முத்தொள்ளாயிரத்தோடும், நன்னூலோடும் முடிந்துபோகிறார்கள். தகவல்
தொழில்நுட்பம் பயின்ற பல இளைஞர்கள் மேற்கத்திய நாகரிகத்தில்
மூழ்கி, பெப்சியில் செத்து மிதக்கும் ஈக்களாய் மிதக்கிறார்கள்.

தமிழின் ஆழ்ந்த அறிவும் தொழில்நுட்பத்தின் விரிவும் இணைந்து
இருநூற்றாண்டுகளைப் பாலம் கட்டி இணைக்கத் தெரிந்த முனைவர்
மு.இளங்கோவனைப் போன்ற இணையத் தமிழர்கள்தாம் தமிழ் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கும் தங்கத் தூண்களாகத் திகழப் போகிறார்கள்.

இவரின் வெற்றி தமிழின் வெற்றி; தமிழின் வெற்றி இவரின் வெற்றி.

வாழ்த்துகிறேன்..
வைரமுத்து

நூல் படி தேவைப்படுவோர் என் மின்னஞ்சல் முகவரிக்குத்
([email protected]) தொடர்புகொள்ளலாம்.

அல்லது +91 94420 29053 என்ற செல்பேசிக்குத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி: http://muelangovan.blogspot.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X