For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறவன்புலவு சச்சிதானந்தனுடன் சந்திப்பு

Google Oneindia Tamil News

Mu Elangovan and Sachithananthan
- முனைவர் மு.இளங்கோவன்

இன்று (19.11.2010) அலுவலக நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. தாம் பேருந்தில் வருவதாகவும் இன்னும் கால் மணி நேரத்தில் புதுவைப் பேருந்துநிலை வந்தால் சந்திக்கலாம் எனவும் அழைப்பின் செய்தி இருந்தது.

இலங்கைச் செலவு முடித்து மீண்டிருந்த திருவாளர் அண்ணாகண்ணனின் அழைப்புக் குரல்தான் அது.(அண்ணாகண்ணன் அமுதசுரபி இதழின் மேனாள் ஆசிரியர். தமிழ் இணைய இதழ்கள் பலவற்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர், நூலாசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் எங்கள் பகுதிக்காரர்.

"கோடாலி கருப்பூர்" என்ற அவர் பிறந்த ஊர் எங்கள் ஊருக்குத் தெற்கே நான்கு கல் தொலைவு. கொள்ளிடக்கரையின் வடகரையில் அமைந்த ஊர். அந்த ஊரில் இத்தகு அறிவாளி தோன்றியுளார் என்பதை அருகில் உள்ள உதயநத்தம் காத்தாயி அம்மன் மேல் சூளுரை செய்தாலும் அந்த ஊர் மக்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவு கல்விக்கு முதன்மையளிக்கும்(!) பகுதி எம் பகுதி.)

நான் முதன்மையான ஒரு பணியில் இருந்ததால் கல்லூரி முடிந்து நாலரை மணிக்குதான் வெளியில் வர இயலும் என்று என் நிலையைத் தெரிவித்தேன். அப்பொழுது நேரம் ஒரு மணி என்பதால் கல்லூரிக்கு வந்தால் என்னுடன் பகலுணவு சேர்ந்து உண்ணலாம் என்று அழைத்தேன்.

புதுச்சேரியில் உள்ள எழுத்தாளர் திரு.அரங்கநாதன் ஐயாவைச் சந்திக்கும்படி அண்ணா கண்ணன் பலமுறை முன்பே வற்புறுத்தியும் பல மாதங்களாகச் சந்திக்கமுடியவில்லை. அண்ணா கண்ணனுடன் சென்று எழுத்தாளரைச் சந்திக்கலாம் என்பது அண்ணாகண்ணனின் அழைப்புக்குக் காரணம்.

முன்பே திட்டம் இல்லாததால் அண்ணாகண்ணனின் திடீர்த் திட்டத்துக்கு என்னால் ஒத்துழைக்க இயலவில்லையே என்று என் அலுவலில் மூழ்கிக் கிடந்தேன்.

சற்று நேரம் கழித்து மீண்டும் அண்ணாகண்ணன் அழைத்தார். இப்பொழுது என்னால் வெளியில் சந்திக்க இயலாது என்றும் முடிந்தால் நாலரை மணிக்குமேல் அலுவலகம் முடித்து வருவதாகவும் மறுமொழி விடுத்தேன்.

எங்கள் கல்லூரி வாயிலில் இருப்பதாக அண்ணா கண்ணன் சொன்னதும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்க வெளியில் வந்தேன்.

அப்பொழுது இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. காந்தளகம் பதிப்பகம் உரிமையாளர் திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களை நம் அண்ணாகண்ணன் அவர்கள் அழைத்து வந்திருந்தார். ஐயாவுடன் முன்பே மின்னஞ்சலில், இலக்கிய நிகழ்வுகளில் சந்திப்பு இருந்தாலும் தனியே சந்திப்பது இதுவே முதன்முறை.

அவர்களின் காந்தளகம் தளத்தில் பன்னிருதிருமுறைக்கு ஒரு பகுதி வைத்து அதில் திருமுறைகளை இசையுடன் பாடச் செய்வதற்கு வசதியும் இருப்பது அறிந்து ஐயாவின்மேல் அளவுக்கு அதிகமான பாசம் எனக்கு உண்டு. மேலும் ஈழத்தமிழர்களின் தமிழ்ப்பணிகளின்மேல் எனக்கு மிகப்பெரிய மதிப்பு எப்பொழுதும் உண்டு.

என் அறைக்கு அழைத்துச்சென்று மூவரும் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர்களின் தாயக நிலை சீராகவும் அமைதிவாழ்க்கை அனைவரும் வாழவேண்டும் எனவும் என் விருப்பத்தைக் கூறி, அவர்களின் பதிப்பகப் பணிகளை வினவினேன். அருகில் இருந்த நண்பர்களுக்குக் காந்தளகத்தின் பதிப்புப் பணிகளை நினைவூட்டினேன். நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.

அருகில் இருந்த சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று குளம்பிக்கு முன்பதிவு செய்து காத்திருந்தோம்.

எங்கள் பேச்சு மெதுவாகத் தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது குறித்துச் சென்றது. அவ்வாறு பேசத் தொடங்கியபொழுது இப்பொழுதுதான் தாம் பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவ்வியார் அவர்களைக் கண்டு வருவதாகச் சொன்னார்கள். நானும் சில நாளுக்கு முன் சென்று சந்தித்துக் கிரந்தம் தொடர்பாக உரையாடியதை எடுத்துரைத்தேன்.

நானும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவும் கிரந்தம் தமிழுக்குத் தேவையில்லை என்று தொல்காப்பியர்,சங்க இலக்கியம், பக்திப்பனுவல்கள் என்று பல சான்றுகள் காட்டிப் பேசினோம். ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஈழத்துத் தமிழறிஞர்கள் யாரும் கிரந்தம் பயன்படுத்துவது இல்லை என்று மறவன்புலவு ஐயா குறிப்பிட்டார்கள். எழுத்தாளர் பழ.கருப்பையாவின் கட்டுரை பற்றியும் பேசினோம்.

அருகில் இருந்த அண்ணாகண்ணன் அவர்கள் இன்றைய நடைமுறை எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டுக் கிரந்தம் தேவை என்பவர்கள் குறிப்பிடும் காரணங்களை எடுத்துரைத்தார். இசுலாமியத் தமிழ் உடன்பிறப்புகள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது ஒலிப்புமுறைக்கு முதன்மையளிக்க விரும்பும் ஒரு நடைமுறைச்சிக்கலையும் எடுத்துக்காட்டினார். அதுபோல் தமிழில் நீக்கமற கலந்துகிடக்கும் ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்ட பிறமொழிச் சொற்களைக் குறிப்பிடும்பொழுது கிரந்த எழுத்துகள் தேவை என்று மக்கள் விரும்புவதை அண்ணாகண்ணன் எடுத்துக்காட்டி எங்களின் விடையினுக்குக் காத்திருந்தார்.

முன்னாள் முதல்வர் ம.கோ.இரா. அவர்களை அவர் வாழுங்காலத்தில் எம்.ஜி.ஆர். என்று அனைவரும் குறிப்பிடப், பாவாணர் உள்ளிட்ட தமிறிஞர்கள் ம.கோ.இரா என்று குறித்ததையும்,தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் இயற்பெயரைப் பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் அருட்செல்வர்(கருணை=அருள்; நிதி= செல்வர்) என்று தூய தமிழில் எழுதியதையும் (அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டுக் காப்போம்- பெருஞ்சித்திரனார்) நான் எடுத்துக்காட்டினேன். இவ்வாறு எழுதியமைக்குத் தமிழக முதலமைச்சர்கள் வருந்தவில்லை எனவும் நல்ல தமிழில் உள்ளதே என்று மகிழ்ந்ததாகவும் அவர்களின் தமிழ்ப்பற்றை எடுத்துப் பேசினோம். தனியொருவருக்காக ஒட்டுமொத்த மக்கள் பேசும் மொழியைப் பலியிடுவது அறிவுலகுக்குப் பொருந்தாது என்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.

வளர்ந்து செறிந்து கிடக்கும் பிறமொழி ஆதிக்கத்தை எவ்வாறு வென்று மீள்வது என்று அண்ணாகண்ணன் கேட்க, அரசு ஓர் ஆணையிட்டுப் பிறமொழிச்சொற்களை, எழுத்துகளைக் கலவாமல் எழுதவும் பேசவும் தமிழக மக்கள் முன்வரும்படியும் அதற்கு ஊடகங்கள் ஒத்துழைக்கவும் வேண்டுகோள் வைத்தால் தமிழ் பிறமொழித் தாக்கம் இல்லாமல் வளரும் என்ற கருத்தை மறவன்புலவு ஐயா முன்மொழிந்தார். நானும் அதனை வழிமொழிந்தேன்.
அனைவரும் தமிழ் நினைவுகளுடன் விடைபெற்றோம்.

நன்றி: http://muelangovan.blogspot.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X